2025 ஜூலை 30, புதன்கிழமை

அமெரிக்க தூதுவர் முல்லைத்தீவுக்கு விஜயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷெல் ஜெ.சிஸன் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ளார். அவருடன் யுஎஸ்எயிட் பணிப்பாளர் ஷெரி கார்லினும் நேற்று புதன்கிழமை சென்றுள்ளார்.

புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட முல்லைத்தீவு பொதுச்சந்தையை அமெரிக்க தூதுவர் திறந்து வைத்துள்ளார்.

தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கவும் உள்ளூர் சமூகங்களை ஒன்றுசேர்ப்பதற்கு வழிகோலும் வகையிலும் முல்லைத்தீவு சந்தை அமெரிக்காவினால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவினாலும் பாதிக்கப்பட்ட இச்சந்தை 4,16,000 அமெரிக்க டொலர்கள் ( ஏறத்தாழ 54 மில்லியன் இலங்கை ரூபா) செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இலகு வழியை ஏற்படுத்தி தருவதுடன் வருமானத்தை பெருக்கி கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித்தருவது மட்டுமன்றி இப்பிரதேசத்தில் மீளக்குடியேறும் பல்லின சமூதாயத்தைச் சேர்ந்தவர்களின் சமூக ஒன்றிணைப்பிற்கும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தை திறப்பு விழாவில் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் மிஷெல் ஜெ. சிஸன், இச் சந்தையை கட்டுவதற்கு பல்வேறு ஒன்று சேர்ந்து பணியாற்றியமையானது கூட்டுச் செயற்பாடு மற்றும் கைகோர்ப்பிற்கான வலுவான முன்னுதாரணமாக திகழ்கின்றது.

இந்த சமூகம் மீண்டுவருகின்ற நிலையில் இணக்க மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட சமூதாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான முயற்சிகள் அடிப்படையானதாக விளங்குகின்றது என்றார்.

இவ்விருவரும் முல்லைத்தீவு பொதுப் பூங்காவிற்கும் விஜயம் செய்தனர். இந்தப் பூங்காவானது 86,000 அமெரிக்க டொலர்கள் ( 11.5மில்லியன் இலங்கை ரூபா) செலவில் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளுடனான நெருங்கிய கைகோர்ப்பின் மூலமாக நிர்மாணிக்கப்பட்டதாகும்.

அத்துடன் கடற்தொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்திற்கும் விஜயம் செய்திருந்தனர். மீனவ சமூதாயத்தினருக்கு உதவுவதற்காகவும் ஸ்திரப்படுத்துவதற்காகவும் 27,000 அமெரிக்க டொலர்கள்( ஏறத்தாழ 3.6மில்லியன் இலங்கை ரூபா) பெறுமதியான கல்வி மற்றும் பயிற்சி நன்கொடை இதற்கு வழங்கப்பட்டது.

இச் சந்தையின் புனரமைப்பு USAID மற்றும் RISENநிறுவனங்களின் உதவியோடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 2009  ஆம் ஆண்டு முதல் கல்வி சுகாதாரம் வணிகம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக வடக்கு கிழக்கு பகுதிகளில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிலான 270 பணித்திட்டங்களை இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .