2025 ஜூலை 30, புதன்கிழமை

போட்டியிடுவதிலிருந்து நான் விலகத்தயார்; உதயராசா

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 06 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

அரசாங்க உத்தியோகத்தை அரசியல்வாதிகள் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவர்களது கடமையாகும். அதற்காக அரசியல் வாதிகள் அவர்களை அடிமைப்படுத்திவிடக்கூடாது என்பதுடன் அரச உத்தியோகஸ்தர்களும் அரசியல் வாதிகளின் அடிமைகளாகிவிடக்கூடாது என்று ஐ.ம.சு.மு வேட்பாளர் ப. உதயராசா தெரிவித்தார்.

ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த தொழிற்சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,

பலவிதமான தேர்தல் சட்டத்திற்கு முரணான பிரசாரத்தை பலர் முன்னெடுத்து செல்கின்றனர். உங்களுக்கு இந்த வேலைவாய்ப்பை வழங்குவதற்கு யார் சந்தர்ப்பம் வழங்கினார்கள். அந்த சந்தர்ப்பத்தை வழங்கியவர்களுக்கு நன்றியுடையவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பை பெற்றுத்தந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்கள் உங்களை தவறாக வழிநடத்தலாம். நீங்கள் படித்தவர்கள் சிந்திக்க வேண்டும். தவறான விதத்தில் மக்கள் மத்தியில் பிரசாரத்தை முன்னெடுத்து செல்லாதீர்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தாம் சொல்லும் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே சமுர்த்தி முத்திரை வழங்கப்படும் என்ற தவறான பிரசாரத்தை சமுர்த்தி உத்தியோகத்தர்கள்  முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசுக்கு எதிரான பிரசாரங்களை நீங்கள் முன்னெடுத்து செல்லாதீர்கள். அரச வேலை பெற்று தந்தவர்களுக்கு விசுவாசமாக இருங்கள். ஆனால், தேர்தல் காலத்தில் மக்களை சுயமாக சிந்திக்க விடுங்கள் என்பதனை கூற விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த கட்சியாக இருந்தாலும் என்ன சேவையை மக்களுக்கு செய்தாலும் இந்த தேர்தல் காலத்தில் மக்கள் மிகவும் நிதானமாக சுயமாக சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

சகல கட்சிகளும் தவறான பிரசாரங்களை செய்கின்றன. இன்றும் இந்த நிகழ்வில் கூட அரசாங்க வேலை பெற்று தரலாம் எனவும் வெளிநாடுகளுக்குரிய வேலை வாய்ப்பை பெற்று தரலாம் என்றும் பலர் அழைக்கப்பட்டுள்ளார்கள். படித்தவர்களே இவ்வாறு ஏமாந்தால் படிக்காத சில கிராம மக்களின் நிலையை என்னவாக இருக்கும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு விடயமும் இந்த மண்ணிலும் நாட்டிலும் மக்களிடத்திலும் ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடியதாக அமைய வேண்டும். அவர்கள் அதை தரலாம் இதை தரலாம் என்பதற்காக நீங்கள் ஒருவரை வெல்ல வைக்கவேண்டும் என எண்ணக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

சுயமாக ஓர் சரியான தலைவனை சரியான உறுப்பினரை தெரிவு செய்ய வேண்டும்.வட மாகாணசபைத்தேர்தல் அபிவிருத்திக்கான தேர்தல் என்பதனை அனைவரும் விளங்கி கொள்ள வேண்டும். இன்று அரசாங்கத்திற்கு எதிராக போட்டியிடுபவர்கள் நகரசபையிலும் சரி பிரதேச சபையிலும் சரி நடக்கபோகும் மாகாணசபையிலும் சரி சர்வதேசத்திற்கு ஓர் செய்தி என்று கூறிக்கொண்டும் தீர்வுக்கான வழி என்றும் பொய்யான பிரசாரத்தை செய்கின்றனர்.

நகரசபை ஆட்சியை கைப்பற்றுவதன் ஊடாக ஓர் தீர்வு வருமாக இருந்தால் இன்றேல் மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றுவதன் ஊடாகவோ தீர்வு கிடைக்குமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுவதிலிருந்து நான் விலகுவதற்கு தயாராக உள்ளேன்.
சர்வதேசத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. சர்வதேசத்தில் இருந்த எத்தனையோ நிறுவனங்கள் இங்கு வந்து சென்றுவிட்டன. அவர்கள் எல்லாம் உரிமையைப்பற்றியோ தீர்வைப்பற்றியோ எதனையும் குறிப்பிடவில்லை.

மாறாக எத்தனையோக ஏழைக்குடும்பங்கள் மலசலகூடங்கள் இல்லாமல் வாழ்கின்றன. குடிப்பதற்கான தண்ணீரை பெறுவதற்கான கிணறு இல்லாது பல இருக்கின்றனர். காணிகளுக்கு உறுதிகள் இல்லாது உள்ளனர், வீட்டுத்திட்டம் இல்லாது உள்ளர் மக்கள் வீதியில் நிற்கின்றனர். மக்களுக்கு பல வேலைகளை நான் செய்து வருகின்றேன். இதன் காரணமாக தாம் வீடுகளுக்கு போக வேண்டி ஏற்பட்டு விடும் என்பதனால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வவுனியாவில் எனக்கு எதிராகவே பிரசாரம் செய்கின்றது.

அரச தரப்பில் தமிழ் உறுப்பினர் ஒருவர் இல்லாத நிலையில் ஒரு தமிழன் வெற்றி பெறுவதை விரும்பாமல் தோற்கடிப்பதற்கு பல வேலைத்திட்டங்களை கூட்டமைப்பு செய்து வருகின்றது.

எனக்கெதிரான செயற்பாடுகள் யாவும் அபிவிருத்திகளை முடக்குவதற்கான செயற்பாடுகளாகவே அமையும் என்பதனை நீங்கள் உணருங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.



  Comments - 0

  • KB Saturday, 07 September 2013 01:17 AM

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சத்தியமாய் விளங்கவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .