2025 ஜூலை 30, புதன்கிழமை

நீதியான தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமே: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கமும் இராணுவமும் இணைந்து பகிரங்கமாக தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதனால், நீதியான முறையில் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமாக இருக்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் இன்று (7.9) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'தேர்தல் சட்டங்களை மீறி ஆளுந்தரப்புக்கு வாக்குச் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
வவுனியா நகர சபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றிற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அரச ஊழியர்கள், ஆளுந்தரப்பு வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு பகிரங்கமாக தேர்தல் பரப்புரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இது அப்பட்டமான தேர்தல் சட்டமீறலாகும்.

அதேபோன்று சனிக்கிழமை வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் ஆளுந்தரப்பிற்கு ஆதரவு திரட்ட சீருடை தரித்த இராணுவத்தினர் பகிரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக நெடுங்கேணி மக்கள் எமக்குத் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம், போக்குவரத்து உட்பட்ட அனைத்து வசதிகளும் மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து கலந்துரையாடுவதற்கு ஞாயிறன்னு (இன்று) நெடுங்கேணி பாடசாலைக்கு வருகை தருமாறும் இராணுவத்தரப்பு மக்களுக்கு தெரிவித்துவருகின்றது. அங்கு தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு அதில் கலந்துகொள்ளச் செய்வதற்காகவே மக்கள் இவ்வாறு இராணுவத்தினரால் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

நாட்டில் சிவில் நிர்வாகம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் இராணுவப் பிரசன்னம் மக்கள் வாழிடங்களில் இல்லை என்றும் தெரிவித்து வருகின்ற அரச தரப்பின் போலி முகம் இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதேபோல அரச தரப்பினால் அண்மையில் நியமனம் வழங்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், தொண்டர் ஆசிரியர்களாக இருந்து நியமனம் பெற்ற ஆசிரியர்கள் என பெருமளவான அரச உத்தியோத்தர்கள் தேர்தல் பரப்புரை நடவடிக்கைளில் ஈடுபடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் குறித்து தேர்தல்கள் திணைக்களம் மற்றும் கபே, பவ்ரல் போன்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களிடமும் பல்வேறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நாளுக்கு நாள் தேர்தல் சட்டங்களை மீறும் நடவடிக்கைகள் அதிகரித்தே வருகின்றன.

பரப்புரை நடவடிக்கைகளில் அரசாங்கமும் இராணுவமும் இணைந்து பகிரங்கமாக தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருகின்றமையும் கண்காணிப்பு அமைப்புக்கள் இது தொடர்பில் அக்கறையின்றிச் செயற்படுகின்றமையும் நீதியான தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகத்தினைத் தோற்றுவித்துள்ளது' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .