2025 ஜூலை 30, புதன்கிழமை

சர்வதேச அமைதி தினத்தில் சதியை முறியடிப்போம்: பாஸ்கரா

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாண மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக காணப்படும் வடமாகாண சபைத் தேர்தல் சர்வதேச அமைதி தினத்தில் இடம்பெறும் நிலையில், சதிகாரர்களின் சதியை முறியடிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்கரா தெரிவித்தார்.

வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து அவர்  தெரிவிக்கையில்,

'வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்வதனூடாக உலகிற்கு எமது விடிவிற்கான பயணச் செய்தியைக் கூற வேண்டும்.

உலக அமைதி தினத்தில் நடைபெறும் இத்தேர்தலில் வீரம் செறிந்த மறவர்கள் வாழ்ந்த மண்ணில் தவறான தெரிவுகளை செய்து விடக்கூடாது.
உலகமே திரும்பிப்பார்க்கும் இத்தேர்தல் காலத்தில்,  எட்டப்பன் வலையில் வந்த சிலரின் சதி வலையில் தமிழர்கள் வீழ்ந்து விடாமல்  தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

கண்டி,  நுவரெலியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எமது கட்சியின் தலைவர் மனோ கணேசன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கோடு வட பகுதியில் பிரசாரம் செய்ய வந்த வேளையில் அவரை ஆள் சேர்க்க வந்ததாக அரசின் அடிவருடிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் எமது பலம், பலவீனம் எமக்குத் தெரியும். நாம் ஆள்; சேர்க்க வேண்டிய தேவை இல்லை. மரக் கொத்தி எல்லா மரத்திலும் கொத்தி இறுதியாக வாழை மரத்தில் கொத்தி மாட்டிய கதையாக விமர்சிப்பவர்களின் கதை அமையப்போகின்றது.

எது எவ்வாறாயினும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பதனூடாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு புதிய வசந்த காற்று வீச வழிசமைக்க வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .