2025 ஜூலை 30, புதன்கிழமை

புலிகள் கைப்பற்றிய ஜோர்தான் கப்பல் விற்பனை

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ஜோர்தான் கப்பல், தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்கப்பல் தற்போது இரும்புத் தேவைக்காக வெட்டப்பட்டு வருகின்றது.

விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கப்பலை பார்க்கச் சென்ற பெருமளவான சுற்றுலாப் பயணிகள், முள்ளிவாய்க்கால் கப்பலடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அக்கப்பலுக்குச் செல்லும் பாதையில் வீதித் தடையொன்று போடப்பட்டு கப்பலடிக்குச் செல்லவிடாமல் படையினர் தடைசெய்துள்ளனர்.

இத்தடைகுறித்து படையினரிடம் கேட்டதற்கு, 'குறித்த கப்பலை தனியார் ஒருவருக்கு அரசாங்கம் விற்பனை செய்துள்ளதால் கப்பலில் இரும்புகள் வெட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று முதல் கப்பலடிக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளை படையினர் திருப்பி அனுப்பி வருவதாக' கூறினர்.

இக்கப்பலானது 2004ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அரிசியை ஏற்றிக்கொண்டு சென்றபோது சர்வதேச கடற்பரப்பில் வைத்து ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தத்தளித்துக்கொண்டிருந்த சமயம் விடுதலைப் புலிகள் அமைப்பினால் குறித்த கப்பல் கரைக்கு கொண்டுவரப்பட்டது. இதிலிருந்த 22 மாலுமிகள் மீட்கப்பட்டு அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அன்று தொடக்கம் இக்கப்பலை பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் வந்து சென்றுள்ளனர். யுத்தம் நடைபெற்ற காலத்தில் முழுமையாக சேதமடைந்த இந்த கப்பல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

2009ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இந்த கப்பல் ஒரு சுற்றுலாப் பொருளாக பொதுமக்களால் பார்க்கப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் இரும்புக்காக இது விற்கப்பட்டு அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .