2025 ஜூலை 30, புதன்கிழமை

தமிழ் மக்களின் வெற்றி இளைஞர், யுவதிகளிடமே உள்ளது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி.

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர், யுவதிகளின் கைகளிலேயே உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  தெரிவித்துள்ளதாவது,

'எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்தியைச் சொல்லப் போகின்றார்கள் என்பதை சர்வதேசம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது.

இதனால் வாக்குரிமையுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் எமது அரசியல் தீர்வுத் திட்டத்தை நோக்கி நகர்வதற்காக கட்டாயம் வாக்களிக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.

இந்த நிலையில், எமது மக்களை வாக்களிக்கச் செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு இளைஞர், யுவதிகளின் கைகளிலேயே  தங்கியுள்ளது. அத்துடன் விளையாட்டுக் கழங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், மாதர் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், வர்த்தகச் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், சமய அமைப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த மாகாணசபைத் தேர்தலில் சகல மக்களையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும்;.

வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல இயலாதவர்களையும் வாக்களிக்கச்  செய்ய வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். போக்குவரத்து வசதி இல்லாத காரணத்திற்காக சில மக்கள் வாக்களிப்பை தவிர்த்து விடுவார்கள்.

அந்த மக்களையும் வாக்களிக்கச் செய்ய கிராம மட்டத்தில் உள்ள சிறிய, பெரிய வாகன உரிமையாளர்களும் தேர்தல் தினத்தன்று எமது மக்களுக்கு உதவி அவர்களும் தமது  வாக்குரிமையை பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ் தேசியம் காக்க விரும்பும் அனைத்து தமிழ் மக்களும் உங்கள் வரலாற்றுக் கடமையைச் செய்து தமிழரின் வெற்றியை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்'  என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .