2025 ஜூலை 30, புதன்கிழமை

வெற்றிலையில் போட்டியிடும் தமிழ் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்தவும்; பிரபா

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மக்களுக்கு வெருமனே வெற்றிலைச் சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்க நான் கேட்கவில்லை. வெற்றிலையினூடாக தமிழ் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதில்தான் உறுதியாக நிற்கின்றோம் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சதீஸ்குமாரை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 1980 களில் இடம்பெற்ற கலவரங்களைத் தொடர்ந்து மலையக இந்திய வம்சாவளி மக்கள் பலர் இங்கு வந்து குடியேறியுள்ளனர். இவர்கள் வட மாகாண மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் பலர் முன்னாள் போராளிகளாகவும் இருக்கின்றார்கள்.

யுத்தத்திற்கு பின்பு வடமாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட முல்லைத்தீவு மாவட்டம் அபிவிருத்தியில் பின் தங்கியுள்ளது. வடமாகாணசபையை யார் கைப்பற்றினாலும் அரசாங்க தரப்பில் தமிழ் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் மத்திய அரசாங்கத்திடமிருந்து அபிவிருத்தியினை கேட்டுப் பெறக்கூடியதாக இருக்கும். அதனால் தான் சதீஸ்குமாருக்கு வாக்களிக்குமாறு முல்லை மாவட்ட மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பிரச்சாரம் செய்ய வந்ததன் பின் கலவரங்களில் பாதிக்கப்பட்டு வடமாகாணத்தில் குடிபுகுந்த மலையக மக்களின் வாக்குகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைக்கும் என தலைவர் சம்பந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இப்பொழுது தான் மலையக தமிழர்களைப் பற்றிய அக்கறை பெரியவர் சம்பந்தனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை காலமும் அப்படியொரு சமூகம் வடமாகாணத்தில் வாழ்வதைப் பற்றி கூட்டமைப்பினர் எவரும் வாய் திறந்ததில்லை. இப்பொழுது வாக்குகள் தேவைப்படும் பொழுது மட்டும் கூட்டமைப்பினருக்கு மலையக மக்களைப் பற்றிய சிந்தனை எழுந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 அதே நேரம் வடபகுதியில் வாழும் மலையக மக்களின் வாக்குகளை மட்டுமே ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரால் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை மறைமுகமாகவும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கின்றார். ஆனால் இங்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாண மக்கள் மட்டுமல்ல மலையக மக்களும் வேட்பாளர் சதீஸ்குமாருக்காக பிரச்சார பணிகளில் ஈடுபடுவதை என்னால் பார்க்க கூடியதாக உள்ளது.

இன்னுமொரு உரிமை போராட்டம் அது ஆயுத போராட்டமோ அல்லது அகிம்சை போராட்டமோ நடத்துவதற்கு கூட உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களை உடனடியாக சீர்செய்ய வேண்டிய கடமை எமக்கு உள்ளது. அதனாலேயே அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து எமது மக்களை 30 வருடத்திற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்ட எம் மக்கள் கல்வியிலும் முன்னேற்றப்பட வேண்டும். அவர்களின் பொருளாதார நிலை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலே பாடசாலைகள், பாதைகள், பாலங்கள், கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். அரச உதவியுடன் மேலும் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரச வேலைவாய்ப்புகளும் சுய தொழில் செய்யக்கூடிய வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

ஆகவே முல்லை மாவட்ட மக்கள் அணி திரண்டு இடதுசாரி கட்சிகளின் சார்பாக அரசாங்கத் தரப்பில் போட்டியிடும் சதீஸ்குமாருக்கு வாக்களித்து அவரின் வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .