2025 ஜூலை 23, புதன்கிழமை

சிவசக்தி எம்.பியின் செயற்பாட்டுக்கு முன்னாள் எம்.பி. கண்டனம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னித்தொகுதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜ. குகனேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவரும்  தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ.ஆனந்தசங்கரியை தகாத வார்த்தைகளாலும் தாக்குவதற்கு முற்படுவதை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா, இந்திரன்ஸ் ஹோட்டலில்  இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'சிவசக்தி ஆனந்தன் எம்.பி அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதில் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டு வருகின்றார். மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தை குழப்பியது ஆகட்டும் மாகாணசபைக்கு முன்னர் கூட்டமைப்பை உடைப்பதற்கு முற்பட்டதாகட்டும் இவரே சூத்திரதாரியாக செயற்பட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மீதான தாக்குதல் முயற்சியாகும். தமிழர் விடுதலைக் கூட்டணி ஒற்றுமையே பலம் என்பதை வலியுறுத்தி வெளியிட்டிருந்த சுவரொட்டி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆனந்தசங்கரியுடன் கடிந்துள்ளதுடன், கூட்டமைப்பின் ஒற்றுமையையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்.

எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணி பல விட்டுக்கொடுப்புக்களுடன் தமிழர் விடுதலையின்பால் நின்று கூட்டமைப்புடன் உழைக்கும் என்பதுடன், சிலரின் சதி வேலைகளுக்கு எப்போதும் கூட்டணி எடுபட்டு விடாது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .