2025 ஜூலை 23, புதன்கிழமை

பொறுமையை கடைப்பிடித்தேன்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

'தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தவர்கள் உட்பட கூட்டமைப்பின் தலைவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவதூறாக கூறிய நிலையிலும் நான் பொறுமையை கடைப்பிடித்தேனே தவிர எவ்விதத்திலும் தகாத வார்த்தைப் பிரயோகத்தையோ தாக்குதல் முயற்சியையோ மேற்கொள்ளவில்லை' என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கூட்டணி தலைவர் வீ.ஆனந்த சங்கரியை அவதூறாக பேசி, தாக்க முற்பட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி தொகுதி தலைவர் இராஜ. குகனேஸ்வரன், ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தது தொடர்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி எனது வீட்டிற்கு வருகை தந்து விசேட சந்திப்பு தொடர்பில் என்னிடம் கேட்டிருந்தார்.

அப்போது இக்கூட்டத்திற்கான ஒழுங்கமைப்புகளை நான் மேற்கொள்ளவில்லை எனவும் அது தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சரிடம் கேட்குமாறு தெரிவித்ததுடன் எவரையும் அழைக்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்படவில்லை, எனவே அது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேளுங்கள் எனவும் தெரிவித்திருந்தேன்.

அத்துடன் நான் அவர் மீது வைத்திருந்த மதிப்பு மற்றும் அவருடைய அரசியல் அனுபவத்திற்கு மதிப்பளிப்பவன் என்ற காரணத்தால் விசேட நிகழ்வொன்றுக்கான எனது பயணத்தினையும் தாமதித்து அவருடன் கலந்துரையாடினேன்.

அவ்வேளையில் அவர் முரண்பாடான விடயங்கள் தொடர்பில் என்னுடன் கலந்துரையாடியிருந்தார். அப்போது என்னாலும் எனது கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.இனாலும் கடந்த காலங்களில் அவருக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நாம் மேற்கொண்ட சில கலந்துரையாடல்கள் தொடர்பில் விளக்கியிருந்தேன்.

குறிப்பாக ஏனையவர்கள் முரண்பட்ட வேளையிலும் வட மாகாண சபையில் அவருக்கு போனஸ் ஆசனத்தில் வாய்ப்பளித்து தவிசாளர் பதவி வழங்கப்படவேண்டும் உட்பட அவருக்காக எமது கட்சியினால் கலந்துரையாடப்பட்ட விடயங்களை கூறினேன்.

எனினும் வட மாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டவர்கள் தொடர்பில் தான் விட்டுக்கொடுப்பை மேற்கொண்டதாகவும் கூட்டமைப்பின் தலைவர்கள் முட்டாள்கள் எனவும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதுடன் அதனை நம்பி தமிழ் மக்கள் வாக்களிக்கின்றனர் எனவும் அவதூறாகவும் ஆக்ரோசமாக பேசினார்.

எனினும் வயதுக்கு மூத்தவர் என்பதனால் மிகவும் பொறுமையாக அவருடன் உரையாடிய போதிலும் இறுதியாக என்னை துரோகி என தெரிவித்து தானாகவே வெளியேறியிருந்தாரே தவிர நான் எவ்விதத்திலும் அவருடைய கட்சி தொடர்பிலோ அவா்களின் சுவரொட்டிகள் தொடர்பிலோ கருத்து தெரிவிக்கவில்லை.

எனவே வீ.ஆனந்தசங்கரி தனது வயதினை கருத்தில் கொண்டு அரசியல் பக்குவத்தன்மையுடன் செயற்படுவது சிறப்பாக இருக்குமே தவிர இவ்வாறான தனது சகாக்களை ஏவி விட்டு அறிக்கை விடுவது சிறந்ததல்ல' எனவும் சிவசக்தி ஆனந்தம் எம்.பி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .