2025 ஜூலை 23, புதன்கிழமை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றனரா என்பது சந்தேகமே: சி.வி.

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


அடுத்த தேர்தலுக்காக எம்மில் பலர் வேலை செய்கின்றனரே தவிர, இந்தத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றனரா என்பது சந்தேகமாக உள்ளதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையில் அமைய அடிப்படையில் பணியாற்றிய அட்டவணைப்படுத்தப்படாத பதவி அணியினருக்கு நிரந்தர நியமனங்கள் திங்கட்கிழமை (03)  வழங்கப்பட்டன. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில்  10 சாரதிகள்,  05 வேலைப்பகுதி தொழிலாளர்கள், 28 சுகாதாரத் தொழிலாளர்கள்,  02 மயானக் காவலாளிகள், 01 நூலக உதவியாளர்,  01 சிற்றூழியர் ஆகிய மொத்தம் 47 பேருக்கு   நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'வடமாகாண தமிழ் பேசும் மக்கள் இன வேறுபாடின்றி, மனிதாபிமான அடிப்படையில் வாழ்கின்றவர்களென உலகம் எம்மை போற்றுமளவிற்கு எமது நடவடிக்கைகள் இருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். அமைச்சர் ரிசாட்டும் அவரது இளைய சகோதரர் பாணியில் எம் எல்லோருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பாரென எண்ணுகிறேன்.

கத்தோலிக்க முஸ்லிம் பிரச்சினை, தமிழர் முஸ்லிம் பிரச்சினை, சிங்களவர் முஸ்லிம்  பிரச்சினை, சிங்களவர் தமிழர் பிரச்சினைகளென்று வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பலவிதமான பிரச்சினைகள் எழுவதை நாம் காண்கிறோம்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் நினைத்தால் அவற்றை நீதி, நியாயமாக தீர்க்கலாமென்பது எனது கருத்து. அதற்குக் காரணம் உலகத்திலுள்ள பலம் வாய்ந்த 500 முஸ்லிம்களில் அவரும்; ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவரது செல்வாக்கை இதிலிருந்து ஊகிக்கலாம். 

இன்று இந்தத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாம் ஒன்றுசேர்ந்தது போல், தொடர்ந்தும் பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சர் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அடுத்த தேர்தலுக்காக எம்மில் பலர் வேலை செய்கின்றனரே தவிர, இந்தத் தேர்தலில் எமக்கு வாக்களித்தவர்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக எமது நடவடிக்கைகள் அமைகிறதா என்பதில் சந்தேகமாகவே உள்ளது.  நாம் அனைவரும் சேர்ந்து ஓர் ஐக்கியமான வடமாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு  உதவியை நாடுகிறோம்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .