2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

'சகல பீடங்களையும் கொண்டமைந்ததாக யாழ். பல்கலைக்கழகம் அமையப் பெற்றுள்ளது'

Kogilavani   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


சகல பீடங்களையும், கற்கை நெறிகளையும் கொண்டதாக யாழ். பல்கலைக்கழகம் அமைந்துள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ்.பி திசாநாயக்க வியாழக்கிழமை (6) தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் மற்றும் விவசாய பீடங்களின் ஆரம்ப நிகழ்வுகள் வியாழக்கிழமை (06) கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள விவசாய பீட வளாகத்தில் இடம்பெறறது.

இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சகல பீடங்களையும், கற்கை நெறிகளையும் கொண்டதாக பேராதனை பல்கலைக்கழகம் விளங்கி வருகின்ற நிலையில், அதற்கு அடுத்த படியாக யாழ். பல்கலைக்கழகமே விளங்குகின்றது.

இதேபோன்று குறித்த இருபீடங்களையும் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு அவற்றுக்கான நிலப்பரப்புகள் போதுமானதான இல்லாத நிலை காணப்படுகின்றது.

வடக்கில் கிளிநொச்சியில் அதிகமான நிலப்பரப்பை கொண்டுள்ளதாக பொறியியல் மற்றும் விவசாய பீடங்கள் அமையப் பெற்றுள்ள நிலையில் ஏனைய பீடங்களையும் விரிவாக்கம் செய்வதற்கான நிலப்பரப்பு காணப்படுகின்றது.

இங்கு அதிகளவிலான மாணவர்களை இணைத்துக் கொள்ளும்பொருட்டு விடுதி வசதிகளும் செய்யப்படவுள்ளன.

யாழ். பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்பதுடன், 43 நாடுகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு விடுதிவசதியுடன் தமது கற்கைநெறிகளை மேற்கொள்ள வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எமது இலக்கிற்கு அமைவாக அதிகளவான மாணவர்கள் தமது கற்கைநெறிகளை மேற்கொள்ள முடியும்,  பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது, இனம், மதம் மொழி என்ற பாகுபாடுகளுக்கு அப்பாலேயே இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.

இதன்மூலமே சமூக ஒருமைப்பாடு, சமாதானம், நட்புறவு மற்றும் சட்டம், ஒழங்கை பேண முடியுமென்பதற்கு அப்பால் ஐக்கியமுள்ள தேசத்தை கட்டியெழுப்ப முடியும். கொடூர யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கும் தற்போதுள்ள சமாதான சூழலுக்காகவும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர் உடமைகளை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

அந்தவகையில், எனது நண்பரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பத்திற்கு மேற்பட்ட தடவைகள் கொலை முயற்சிகளிலிருந்து உயிர் பிழைத்துள்ளார். அவரது ஆசிர்வாதத்துடனும், பேராதரவுடனும் ஜனநாயகத்தை இந்நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர்' என்றார்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்

இந் நிகழ்வில் பொறியியற் பீட பீடாதிபதி கலாநிதி அற்புதராஜா, விவசாய பீடாதிபதி கலாநிதி சிவமதி சிவச்சந்திரன், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன், ஈ.பி.டி.பியின் வட மாகாண சபையின் உறுப்பினர் வை.தவநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களின் பீடாதிபதிகள், பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கான நினைவுக் கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சகிதம் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க திரைநீக்கம் செய்து வைத்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .