2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெற்றது; ஜப்பான் துதுவரிடம் அன்ரனி ஜெகநாதன் தெரிவிப்பு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


'தமிழர்களின் வரலாறுகளை எடுத்துப்பார்த்தால் எம்மினத்தினை நன்கு திட்டமிட்ட முறையில் அழித்தொழித்த வரலாறுகளே சான்றாக அமைகின்றது. அதனடிப்படையிலேதான் 2009ஆம் ஆண்ட மே மாதம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவமானது அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழ் இன அழிப்பின் செயற்பாடாகும்' என வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் கூறினார்.
 
வடமாகாணசபை பிரதி அவைத் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமாகிய ம.அன்ரனி ஜெயநாதனுக்கும் ஜப்பானிய தூதராலயத்தின் அரசியல் பிரிவு உயர்ஸ்தானிகர் நவொகொ குராமொச்சிக்கும் இடையில் நேற்று (06) சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே பிரதி அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'வடக்கிலே இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற வேளையிலே பாதுகாப்பு வலயம் என்ற ஒன்றினை ஏற்படுத்தி அதற்குள் வலுக்கட்டாயமாக தமிழ் மக்களை அழைத்துக்கொண்டு எந்தவித பாராபட்சமும் காட்டாது குண்டு போட்டு அழித்ததோடு காயப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்காமையினால் எத்தனையோ தமிழ் மக்கள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்டார்கள்.
 
பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவர்களுக்குக்கு கூட உரிய சிகிச்சை அழக்காததன் காரணமாகவும் சிறார்கள் தொடக்கம் வயோதிபர்கள் வரை துடிதுடிக்க இறந்தார்கள். இதனைத்தான் இந்த அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கை என்று உலக நாடுகளுக்கு பறைசாற்றுகின்றது.
 
போர்ச் சூழலில் அகப்பட்ட மக்களுக்கு உணவு கொடுக்காமல் வெறுமனே உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக 1000பேருக்கு உணவு கொடுத்து விட்டு அனைவருக்கும் போதியளவு உணவினை கொடுத்திருக்கின்றோம் என்று சர்வதேசத்தினை முழுக்க முழுக்க இந்த நாட்டு அரசாங்கம் ஏமாற்றியது. தற்போதும் இதனைத்தான் செய்து வருகின்றது.
 
யுத்த களத்திலே சரணடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களின் விபரங்களோ, இருப்போ இதுவரைக்கும் தெரியப்படுத்தப்படவில்லை. கண்துடைப்பிற்காக வேண்டி அரசாங்கத்தினால் நிருவப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு இதுவரைக்கும் செய்தது என்ன?
 
இந்த நாட்டிலே ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டு இருக்கின்றது. உண்மையை வெளிப்படுத்து ஊடகவியலாளர்கள் பல வழிகளில் அச்சுறுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் தண்டிக்கப்பட்டுமே வருகின்றார்கள்.
 
அதாவது மக்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை எந்தவொரு செயற்பாடுகளையும் செய்யவிடாது அரசு முடைக்கி வைத்திருப்பதற்;கு காரணம் ஆளுநர் என்பதையும் சுட்டிக்காட்டி அவருடன் சேர்ந்து பிரதம செயலாளரின் செயற்பாடுகள் பற்றியும் அதனால் வட மாகாண சபையின் செயற்பாடுகள் எந்த முறையில் முடக்கி விடப்பட்டுள்ளது' என்பதனையும் தெரிவித்துள்ளார்.

'இராணுவமே அரச அதிகாரிகளையும் அதன் செயற்பாடுகளையும் தம்வசம் சட்டத்திற்கு முரணாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும்' அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
'இராணுவம்  புலனாய்வாளர்கள் அடாவடித்தனத்தின் மூலமே எமது தமிழ் மக்கள் தமது சொத்துக்களை விற்றும் கடன்கள் பல பெற்று ந்ளிநாடுகளுக்கு சென்று தஞ்சம் கேட்டு நிற்கின்றனர். ஆனால் அரசாங்கமோ வெளிநாட்டு அரசுகளுக்கு பொய்யான தகவல்களை கூறியும் வெளிநாட்டு அரசு உயர்ஸ்தானிகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது பாதிக்கப்பட்ட மக்களை தவிர்த்து அரசு தமக்கு சார்ந்தவர்களை வைத்து பொய்யான தகவல்களை அவர்களுக்கு கூறி அவர்களை நம்பவைத்து அனுப்புகின்றனர்.

அதை நம்பி வருகை தருகின்ற உயர்ஸ்தானிகர்கள் இலங்கை அரசுக்கு சாதகமான அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இடைபுகுந்து உயர்ஸ்தானிகர்களை சந்திக்கும் போதும் இராணுவ புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோரி சென்ற மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்ற போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சொல்லுக்கடங்காதவை' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .