2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யுத்தம், வன்முறைகளால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்: சிவமோகன்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழினத்தின் மீதான யுத்தம்  மற்றும் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களேயென வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்றது. இதில்  முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இந்தக் கல்லூரியின் பழைய மாணவன் என்ற ரீதியிலும் இந்தக் கல்லூரியில் நான் கற்கும் காலத்தில் கற்றவர்களில்  பலர் இன்று சமூகத்தில் உயர் பதவிகளில் இருந்துகொண்டு இந்த நிகழ்வில்; கலந்துகொண்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.  இருப்பினும், இந்தக் கல்லூரியில் கற்ற நண்பர்கள், மாணவர்களில் பலர் இன்று எங்கள் கூட இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது?  ஏது ஆனது?  என்று நெஞ்சை அழுத்தும் பெரும்  துயரமும் உள்ளது.

என்னைப் போலவே உங்களில் பலருக்கும் இந்தத் துயரம் இருக்கலாம். இறுதிக்கட்ட யுத்தத்துக்கு முன்னர் இந்தக் கல்லூரியில் கற்ற உங்கள் வகுப்பறை நண்பர்களில் ஒரு தொகுதியினர், மீள்குடியேறும்போது இந்தக் கல்லூரிக்கு திரும்பி வரவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்பது பற்றி நீங்கள் இன்றும் கூட விசாரித்துக்கொண்டும் தேடிக்கொண்டும் தான் இருக்கின்றீர்கள்.

இது ஒரு மெய்வல்லுநர் போட்டி. கடந்த காலத்தில் வெற்றிக்கிண்ணங்களை சுவீகரித்த உங்கள் வகுப்பறை நண்பர்களில் இன்னுமொரு தொகுதியினர், இன்று தமது மெய்வன்மையை நிரூபிக்க முடியாமல் வெளியில் பார்வையாளர்களாக இருந்துகொண்டு நீங்கள் விளையாடுவதை ரசித்துக்கொண்டும் உற்சாகப்படுத்திக்கொண்டும் இருக்கின்றார்கள்.

இறுதிக்கட்ட யுத்தத்தில்  படைகளால் எத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு சாட்சிகளாகவும் எறிகணைச் சிதறல் துண்டுகளையும் துப்பாக்கி ரவைகளையும் உடலில் தாங்கிக்கொண்டும் அந்த ஒருதொகுதி மாணவர்கள் ஓரமாக இருந்துகொண்டு போட்டியை ரசித்துக்கொண்டும் வெறித்துப் பார்த்துக்கொண்டும் இருக்கின்றனர். 

தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னரான காலப்பகுதியில் 9 இலட்சம் சிறுவர்கள் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக சர்வதேச தொண்டு நிறுவனமான யுனிசெப், தனது சுயாதீன புள்ளி விவரத் தகவல் சேகரிப்பில் அறிக்கையிட்டது.

யுத்தத்தின்போது  ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாடு, போஷாக்கின்மை, சுகாதாரச் சீர்கேடுகள், நேரடிக் காயங்கள், கண்ணிவெடிப்புகள் போன்ற பாதிப்புகளினால் வன்னி  மற்றும் யாழ்ப்பாணத்தில் இறப்பு, பிறப்பு வீதம் (ஐகெயவெ ஆழசவயடவைல சுயவந) ஆயிரம் பிறப்புகளுக்கு இறப்பு வீதம் 41 சதவீதமாகவும் சமநேரத்தில் இலங்கை முழுவதும் 23 சதவீதமாகவும் தென்னிலங்கையில் 14 சதவீதமாகவும்  பதிவாகியிருந்தன.

இந்தப் பதிவுகளிலிருந்து எமது நிலத்தின் மீது, தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தம்; மற்றும் வன்முறைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என்ற உண்மை புலனாவதோடு இந்த யுத்தத்தால்  தமிழர் தாயக பிரதேசங்களே மோசமாக சிதைக்கப்பட்டன என்பதும் தெளிவாகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவுக்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற இறப்புகள், இழப்புகள் தொடர்பில் இன்றுவரை சரியான புள்ளிவிவர அறிக்கைகள் இடப்படவில்லை. இன்னோரன்ன பல விடயங்களில் பலரும் தமக்கு சாதகமாக, தமது தேவைக்கேற்ப எழுந்தமானமாக புள்ளிவிவரங்களை காட்டுகின்றனர். பயன்படுத்துகின்றனர்.

தொலைத்தொடர்பு, அத்தியாவசியக் கல்வி, சத்துணவு, போக்குவரத்து, சுகாதார வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை யுத்தம் மோசமாக சீர்குலைத்திருந்ததால்; இறப்பு வீதங்களின் தாக்கங்கள், அவர்கள் சொல்வதை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதே உண்மை நிலையாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .