2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இந்திய வீட்டுத் திட்டத்திற்கு பொலிஸார் இடையூறு: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Super User   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களைக் கூட கட்ட முடியாதவாறு அரசாங்கமும் பொலிஸாரும் இணைந்து நெருக்குதல்களை கொடுத்து வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

நெடுங்கேணி பிரதேசத்தில் இந்திய வீட்டுத் திட்ட பயனாளிகள் உடன் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"யுத்தத்தின் காரணமாக மக்களுடைய வீடுகள் அழிக்கப்பட்டு அவர்கள் கூடாரங்களுக்குள்ளேயே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எமது மக்கள் வீடுகளை இழந்து நிர்கதியாக இருக்கும் நிலையினைப் பார்த்த இந்திய அரசாங்கம் எமது மக்களுக்கான ஒரு தொகுதி வீட்டுத் திட்டத்தை வழங்கியுள்ளது.

இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருகிறன. அந்த முறைகேடுகளையும் தாண்டி எமது மக்களுக்கு கிடைக்கின்ற வீட்டுத் திட்டத்திற்கான நிதி தற்போதைய இலங்கையின் பொருளாதார நிலைக்கு போதியதாக இல்லை.

இதனால் வீட்டுத் திட்டத்திற்கு தேவையான மரங்களை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டுத் திட்டத்திற்கு தேவையான மரங்களை தமது காணிகளில் இருந்து பெற்றுக் கொள்வதன் மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்தி வீட்டுத் திட்டத்தை முழுமை பெறச் செய்யலாம் எனக் கருதுகின்றனர்.

இதனால் மரங்களை வெட்டுவதற்காக பிரதேச செயலகம், வன இலாகா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் அனுமதி பெற்று அவற்றை வெட்டி தமது வீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வவுனியா வடக்கு பிரதேசத்தில் உள்ள ஒலுமடு மற்றும் கற்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள நான்கு மரக்காளைகளுக்குள் புகுந்த பொலிஸார் அங்கு இந்திய வீட்டுத் திட்டத்திற்காக மக்களினால் அனுமதியுடன் வெட்டப்பட்ட மரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் அந்த மரப் பட்டறைகளையும் பூட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தமக்கு தேவையான வீட்டுத் திட்ட கதவுகளையும் தளபாடங்களையும் செய்வதற்கு வவுனியாவிற்கு அல்லது ஒட்டிசுட்டானுக்கு செல்ல வேண்டி ஏற்படும்.

இதனால் அவர்கள் வீட்டுத் திட்டத்தை நிறைவேற்ற மேலும் பல ஆயிரம் ரூபா பணங்களை செலுத்த வேண்டிவரும் என பாதிக்கப்பட்ட மக்கள்.

நெடுங்கேணி பிரதேச மக்கள் தமது வீட்டில் இருந்த மரங்களினை அனுமதி பெற்று வெட்டி வீட்டு மரங்கள் அரிவதற்கும் கதவு, யன்னல் உள்ளிட்ட தளபாடங்கள் செய்வதற்கும் ஒப்படைத்திருந்த நிலையில் அதனை பொலிஸார் அள்ளிச் சென்றுள்ளமை வீட்டுத் திட்ட பணிகளை பாதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

இன்று வன்னியில் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டு விறகுக்காகவும் அரிமரமரங்களும் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் நிலையில் அதனை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளும் பொலிஸாரும் மக்கள் முறையான அனுமதி பெற்று தமது தேவைக்காக வெட்டும் மரங்களை அள்ளிச் செல்வதும் தடுப்பதும் வீட்டுத் திட்டத்தை குழப்பும் செயற்பாடுகளாக பார்க்க வேண்டியுள்ளது.

நெடுங்கேணி மட்டுமன்றி இவ்வாறான திட்டமிட்ட குழப்ப வேலைகள் வன்னியின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகிறது. வவுனியா வடக்கில் உள்ள குழவிசுட்டான், நைனாமடு, நொச்சிக்குளம் போன்ற பகுதிகளில் கள்ளமரம் வெட்டி ஏற்றப்பட்டு வருகிறது. அதுபோல வவுனியாவின் பறநாட்டாங்கல், பம்பைமடு, போன்ற பகுதிகளிலும் விறகுக்காக சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

இவற்றை தடுக்காத பொலிஸார் மக்கள் தமது வீடு, வேலி என்பவற்றை அமைக்க வெட்டும் மரங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த பட்சம் ஒரு கோழிக்கூட்டை அமைக்க கூட ஒரு சிறு மரத்தடியைக் கூட பெறமுடியாதவாறு சாதாரண மக்களுக்கு பொலிஸார் நெருக்குவாரங்களை கொடுத்து வருகின்ற அதேநேரம் கண்முண்னே போகும் கள்ளமரங்களை கொண்டு செல்லும் போது வேடிக்கை பார்பது எவ்வகையில் நியாயம்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .