2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வலிமையான இளைஞர் கைகளில் வாள்கள் இருப்பது துர்ப்பாக்கியம்: பரந்தாமன்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வலிமை மிக்க இளைஞர்களின் கைகளில் வாள்கள் இருப்பது துர்ப்பாக்கியமென வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான புதிய நிர்வாகிகள் தெரிவு புதன்கிழமை (12) வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்,

'இளைஞர்கள் வருங்காலத்தின் சிப்பிகள். இவர்களில் ஏராளமான நல்ல இளைஞர்கள் இருக்கின்றனர்.  எனினும், ஒரு சில தீய சிந்தனையுள்ள இளைஞர்களால் இளைஞர்கள் சகலருக்கும் நற்பெயர் குறைவதாக உள்ளது.

இளைஞர்களிடம் எதிர்காலத்தை எவ்வாறு கையில் எடுப்பது என்ற இலட்சிய நோக்கு இருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே இளைஞர்கள் மேன்மையடைய வாய்ப்புகள் ஏற்படும்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உட்பட வேறு குழுவொன்றும் இயங்கிய நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு;ளனர். இவர்கள் அனைவரும் இளம் வயதினர். ஆவா குழுவின் தலைவர் 21 வயதுடையவராக இருந்துள்ளார். இது இளைஞர் சமூகம் தவறாக செல்வதை எடுத்துக்காட்டியுள்ளது. இக்குழுக்கள் யாழ். மக்களை நித்திரையின்றிச் செய்துள்ளனர்.

இளைஞர்கள் பெரியவர்களுக்கு மதிப்பளித்து வணங்க வேண்டியவர்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து சில தீய குழுக்கள் பெரியவர்கள் தம்மை வணங்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர். இது வெட்கப்படவேண்டிய விடயம்.

இளைஞர்களாகிய நீங்கள் சவால்களை கையில் எடுக்க வேண்டும். இளைஞர் கழகத்தில் நான் இருந்தமையினாலேயே இன்று பிரதேச செயலாளராக இருக்கின்றேன். அதன் மூலம் பெறப்பட்ட தலைமைத்துவம் எனக்கு மிகவும் பயனாகவுள்ளது. எனவே இளைஞர்கள் இளைஞர் கழகங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் திட்டமிடலுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுடன் இலட்சிய நோக்கோடு செயற்படவும் வேண்டும். ஆனால், இன்று வீதிகளில் செல்லும் பல இளைஞர்கள் எதுவித சிந்தனையும் இன்றி திரிகின்றனர். இவர்கள் நாட்டிற்கு சுமையாகவே இருப்பர்.

இளைஞர்களாகிய நீங்கள் சமூகத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அளவிற்கு சவால்களை எதிர்கொள்பவர்களாக வளரவேண்டும். முழுமையாக சமூக பிரச்சினைகளை நீங்கள் தீர்த்து விடமுடியாது. எனினும் சில பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனை சீர்செய்ய முடியும். குறிப்பாக நீங்கள் வாழும் பிரதேசத்தை மது அற்ற பிரதேசமாக மாற்றுவதாக சத்தியம் செய்துகொள்ளுங்கள். அது பயனுள்ளதாக இருக்கும்.

இதன் மூலம் பிழையாக செல்லும் இளைஞர் சமூகத்திற்கு நீங்கள் முன்னுதாரணமாக வழிகாட்டியாக இருக்க வேண்டும்' என்றார்.

இதன்போது வவுனியா வடக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள 20 இளைஞர் கழகங்களுக்கிடையில்  நிர்வாகத் தெரிவின்போது தலைவராக ம.உதயகுமாரும் செயலாளராக சி.சதீஸ்குமாரும் பொருளாளராக ஆர்.ரதனும் உபதலைவராக ஆர்.அகல்யவும் உபசெயலாளராக பி.தர்சிகாவும் அமைப்பாளராக எஸ்.சஞ்சனும் தெரிவுசெய்யப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .