2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வறுமையால் இடைவிலகும் மாணவர்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் உதவ வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபிலநாத்

யுத்தத்தால் பாதிப்படைந்த வன்னியிலுள்ள  பாடசாலைகளில் கல்வி கற்று வெளிநாடுகளில்  நாடுகளில் உள்ளவர்கள், தாங்கள்  கற்ற பாடசாலைகளிலிருந்து வறுமையால்  பாடசாலை இடை விலகலை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வலுநர் விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கனகராயன்குளம் பாடசாலையானது 12 கிராமங்களைச் சேர்ந்த 1,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையாகும். இருப்பினும், நாளாந்தம் 100 வரையிலான மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில்லை. காரணம் யுத்தத்தினால் ஏற்பட்ட குடும்ப வறுமை. தாய் தந்தை ஆகிய இருவரும் கூலி வேலைக்கு செல்வதன் காரணமாக பிள்ளைகள் வீட்டில் மறித்து வைக்கப்படுகின்றனர்.

சில குடும்பங்களில் பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளே கூலி வேலைக்கும் சென்று தமது குடும்பங்களை பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், பாடசாலை வரவு என்பது நாளாந்தம் குறைவடைந்தே செல்கின்றது. ஆனால், இன்று உலகம் விஞ்ஞான தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சியடைந்து எங்கோ செல்கின்றது.

இதனால், இம்மாணவர்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டியவர்களாகவுள்ளனர். அவ்வாறு கற்காதுவிடின், இம்மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அமைவதுடன் அவர்கள் பல சவால்களையும் எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிவரும்.

எனவே, மாணவர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு இந்த பாடசாலைகளில் கல்வி கற்று புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் உறவுகள் தாம் கல்விகற்ற பாடசாலையில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும்.

இதைவிட இப்பாடசாலை அமைந்துள்ள வவுனியா வடக்கு வலயத்தில் 20 பாடசாலைகள் ஆசிரியர்கள் இன்றி அதிபர்களுடன் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.
வடக்கு வலயத்தைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் இடம்மாற்றம் கோரி விண்ணப்பித்துள்ளனர. அவர்களுக்கான பதிலீடு இன்னமும் இப்பாடசாலைகளுக்கு வரவில்லை. எனவே ஆசிரியர்கள் வளம் என்பது வவுனியா வடக்கில் பெரும் குறைவாகவே உள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்கும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .