2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மக்களை மோதவிடும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர்: றிசாத்

Super User   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை மோதவிடும் வகையில் இனவாத செயற்பாடுகளில் சில தமிழ் அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருதமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அரசியலில் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இவர்கள் குறித்த செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் விரும்புகிறார் என அமைச்சர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கோட்டத்திற்குற்பட்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

"நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலமையிலான அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளது.

யுத்தத்தினால் இன்று அதிகமான அழிவை எதிர்நோக்கிய முல்லைத்தீவு மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நான் அங்கீகாரத்தை வழங்கியுள்ளேன். அபிவிருத்தி என்று பார்க்கும் போது அங்கு இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் பார்ப்பதில்லை.

எந்த கிராமங்கள் அபிவிருத்தியின்றி காணப்படுகிறதோ அத்தனை கிராமங்களையும் எதுவித குறைபாடுகளின்றி அபிவிருத்தி செய்திருக்கிறேன். இறுதிகட்ட யுத்தத்தின்  போது வவுனியா, ஓமந்தைக்கு சோதனைச் சாவடிக்கு வந்த சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்களை இரவு, பகலாக களத்தில் நின்று அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவம், பாதுகாப்பு, இருப்பிட வசதி என்பனவற்றை மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தேன்.

அது மட்டுமன்றி அங்கு வந்த மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்பதற்காக கொழும்பிலிருந்து விஷேட ஆசிரியர்களை அழைப்பித்து அம்மாணவர்களுக்கு கல்வியை கொடுத்திருக்கிறேன். அதன் பலனாக இன்று பலர் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறைகளிலும், விஞ்ஞானப் பிரிவுகளிலும் கலைப் பிரிவுகளிலும் கற்கின்றார்கள்.

இவ்வாறு தமிழ் மக்கள் மீதுள்ள அன்பினாலும் இரக்கத்தினாலும் தூய்மையான எண்ணத்துடன் பணியாற்றிய என்னை இன்று சில தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காக சில ஊடகங்களை பயன்படுத்தி என்னை ஒரு இனவாதியாகவும் மதவாதியாகவும் தமிழ் மக்களின் விரோதியாக காட்ட முயல்கின்றனர்.

முல்லைத்தீவில் இருந்து விடுதலைப் புலிகளினால் 1990ஆம் ஆண்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மீளவும் குடியமர்வதற்கு முல்லைத்தீவில் ஒருதுண்டு காணியில்லாமையினாலே இன்று அவர்கள் தொடர்ந்தும் புத்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே அவர்களுக்கு காணி வழங்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமை சேர்ந்த ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்களை தெரிவிக்கிறார்கள். மட்டுமன்றி முல்லைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை சொல்லி தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.

முல்லைத்தீவில் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு நிறைய பிரச்சினைகள் காணப்படுகிறது. இருப்பதற்கு காணி, வீடு, படிப்பதற்கு ஒரு பாடசாலை, தொழுவதற்கு ஒரு பள்ளிவாயல் இதைத் தவிர அவர்கள் எதுவும் கேட்கவில்லை.
எனவே வடக்கில் வாழும் முஸ்லிம்களை அரவணைக்க வேண்டிய பொறுப்பு இந்த வட மாகாண சபைக்கும், அதனைச் சார்ந்த அரசியல் பிரதிநிதிகளுக்கும் உள்ளது.

இன்று வட மாகாண சபையின் முதலமைச்சர் ஒரு சிறந்த ஆளுமை மிக்க ஒருவராக நான் பார்க்கிறேன். நல்ல தலமைத்துவ பண்பையும் அவர் கொண்டிருக்கிறார். வட மாகாணத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வேண்டும் என்ற ஆசை முதலமைச்சருக்கு உள்ளது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .