2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சட்ட விரோத காடழிப்புக்கு வன இலாகா அதிகாரிகள் துணை: சிவசக்தி ஆனந்தன்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வவுனியாவில் இடம்பெறுகின்ற சட்டவிரோத காடழிப்புக்கு வவுனியா வன இலாகா அதிகாரிகள் துணைபோவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த சில மாதங்களாக ஓமந்தை அரச முறிப்பில் தனியார்  ஒருவரால் 300 ஏக்கருக்கு மேற்பட்ட வன இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ள காடு அழிக்கப்பட்டு அதில் உள்ள பெறுமதி மிக்க பாலை, முதிரை போன்ற மரங்கள் வியாபாரத்திற்காக வெட்டப்பட்டு வருகின்றது.

அக்காட்டு நிலம் தனக்கூறியது என்று கூறுவதற்கேதுவாக நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாத சட்ட வலுவற்ற ஜப்பான் உறுதி என அழைக்கப்படும் ஒரு பொய் உறுதியை தயார் செய்து வைத்துக்கொண்டே இந்த காடழிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் சுற்றாடல் அமைச்சின் 2010ஃ04 சுற்றுநிருபத்தின் படி காட்டில் உள்ள பாலை, முதிரை, கருங்காலி போன்ற பெறுமதியான மரங்கள் அழிக்கப்படுவதாக இருந்தால் நில அளவைத் திணைக்களம், வன இலாகா, பிரதேச செயலாளர், சுற்றாடல் அமைச்சு அதிகாரிகள் ஆகியோரிடம் முறையான அனுமதி பெறவேண்டும்.

அப்படி இருக்கையில் இங்கு அந்த நடைமுறைகள் எதுவும் பின் பற்றப்படாமல் வெறுமனே சட்ட வலுவற்ற யப்பான் உறுதியை வைத்துக்கொண்டு அனுமதி வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது.
இது தொடர்பாக கடந்த 21ஆம் திகதி மாவட்ட வன இலாகா அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்ட போது, காடழிக்கும் தனி நபரிடம் ஜப்பான் உறுதி இருப்பதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இவ்வாறு அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட பதிலும்; திருப்திகரமாக இல்லை. இதனால் இக்காடழிப்புக்கு மாவட்ட வன இலாகா துணைபோகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இக்காடழிப்பை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்;கை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சரையும் தொலைநகல் மூலம் கேட்டிருக்கின்றேன்.

இது தவிர, ஏற்கனவே வன இலாகாவின் உத்தரவு பெற்று நடத்தப்பட்டு வரும் மரக்காலைகளின் உரிமையாளர்களை வவுனியா வன இலாகா உத்தியோகஸ்தர்கள் இலஞ்சம் கேட்டு பயமுறுத்துவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

சில நாட்களுக்கு முன் ஓமந்தையில் ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபாயும் வவுனியா நகரில் ஒருவரிடம் இருபதாயிரம் ரூபாயும் வன இலாகா உத்தியோகஸ்தர்கள் இலஞ்சம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தொலைபேசியில் வவுனியா மாவட்ட வன இலாகா உத்தியோகஸ்தரிடம் வினவிய போது அவர் எனக்கு அளித்த பதில் திருப்தியாக அமையவில்லை.

மக்கள் பிரதி நிதியாகிய என்னுடன் அவர்கள் உரையாடிய போது நடந்து கொண்ட விதம் என்னை அவமதிப்பதாக இருந்தது.

மக்கள் பிரதிநி தியாகிய என்னுடனேயே இவ்வாறு நடந்து கொள்ளும் இவர்கள் சாதாரண மக்களுடன் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் வன இலாகா அதிகாரியால் கடிதம் மூலம் எனக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அது தனிச்சிங்களத்தில் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை நிர்வாக எல்லைக்குள் இருக்கும் ஒரு பிரதேசத்தில் உள்ள ஒரு காரியாலயம் அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான என்னுடன் தனிச் சிங்களத்தில் தொடர்பு கொள்ளும் போது பொதுமக்களுடனான தொடர்பு எவ்வாறு இருக்கும் என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

மும்மொழிக் கொள்கை நடை முறைப்படுத்துவதாக அரசும் அமைச்சர்களும் கூறி வரும் நிலையில் வன இலாகா அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்வது அரசின் கபட தனத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது' எனவும் அவ்வறிக்கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .