2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மீனவர் பிரச்சினையை இலங்கை அரசு பூதாகரமாக்குகிறது: சிவமோகன்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழக மீனவர்களினால் எமது மக்களின் மீன்வளம் சூறையாடப்படுவதாக இலங்கை அரசு பூதாகாரமாக செய்திகளை வெளியிடுகின்றது என வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட பிரதிநிதி, வைத்தியகலாநிதி சி. சிவமோகன் தெரிவித்தார்.

மீன்வர்களின் பிரச்சினை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று (28) வெளியிட்டுள்ள இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது...

தொப்புள் கொடி உறவு வழி முறையாக தொடரும் தமிழக – தாயக குடும்பப் பிணைப்பை அறுத்தெறிந்து விடும் சூட்சுமமான சூழ்ச்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. சீனா உள்ளிட்ட ஸ்ரீலங்காவுடன் நட்பு பாராட்டும் பல நாடுகள் எமது கடல் வளத்தை சூறையாடி வருவதாக ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் எமது மீனவர்கள் குற்றம் தெரிவிக்கின்றனர். ஆழ் கடலில் பல நாட்களாக தரித்து நின்று இராட்சத இயந்திரவலு படகுகள் மூலம் வேற்று நாட்டவர்கள் தொழிலில் ஈடுபடுவதை எம்மிடம் உறுதிப்படுத்தியும் உள்ளனர். இவ்விடயத்தில் அரச நாடாளுமன்றத்தின் அனுமதி உள்ளதா என்றும் கூட சந்தேகம் எழுகின்றது.

முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக எம் மக்கள் செத்து மடிந்த போது, தம் உயிரை மாய்த்தாவது போரை நிறுத்தி எம் மக்களின் உயிரை காப்பாற்றி விட வேண்டும் என்று, தம் உடலை தீயிட்டுக்கொழுத்தி, தம்மை ஈகிகள் ஆக்கிக்கொண்ட எமதருமை தமிழக வாழ் மக்கள், எங்கள் மீன்வளத்தை வாரி அள்ளிச்சுருட்டிக்கொண்டு எம்மை எல்லாம் பட்டினிச்சாவில் போட்டுக்கொன்று விடுவார்கள் என்று எந்த ஈழத்தமிழனும் புலம்பவில்லை.

இழுவை வலையை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடும் சிறு எண்ணிக்கையிலான மன்னார் மாவட்ட தமிழ் மீனவர்களுக்கு தடை விதித்திருக்கும் இந்த அரசு, தென்னிலங்கையில் தாராளமாக இழுவை வலையை வகைதொகையின்றி சிங்கள மக்கள் பாவிப்பதற்கு அனுமதித்துள்ளது. நாயாற்று பிரதேசத்தில் தென்பகுதி மீனவர்கள் 54 பேர் மட்டுமே தொழில் செய்ய உரித்துள்ள நிலையில், 250 படகுகளுடன் 250 க்கும் மேல்பட்ட சிங்கள குடும்பங்களை கொண்டு வந்து விட்டு எமது மக்களின் மீன்வளத்தை சூறையாடவில்லையா?

அதேவேளை நாயாற்று பிரதேசத்தில், நான்கே நான்கு தமிழ் மீனவ குடும்பங்கள் தான் தற்போது கடல் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் அங்கு தொழில் செய்து வந்த நிலையில் இன்று நான்கே நான்கு குடும்பங்கள் தான் தொழிலில் ஈடுபட்டுள்ளன என்றால், அதற்கு காரணம், அடிப்படை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளமையும், இறுதி யுத்தத்தில் பல தமிழ் குடும்பங்கள் இறந்து போனமையுமாகும். ஸ்ரீலங்கா அரசு, தமிழர் தாயக பூமியில் இன விகிதாசாரத்தை எத்தகைய முறையில் மாற்றியமைக்கிறது என்பதற்கு இந்த ஒரே ஒரு எடுகோளே போதும்.

எமது மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் இதயசுத்தியில்லாத இந்த அரசு, தென்னிலங்கையில் இருந்து மீனவர்களை இறக்குமதி செய்து எமது கடல் வளத்தை தாறுமாறாக சுரண்டிக்கொண்டு, எமது மக்களின் வாழ்வாதாரம் பற்றி சிந்திப்பது போல் பாசாங்கு செய்து, இருநாட்டு மீனவர்கள் உறவில் விரிசலை உண்டு பண்ணி பகை உணர்வை வளர்க்க முனைகிறது. ஸ்ரீலங்கா அரசின் இத்தகைய வஞ்சிப்பு நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு உலகமே திரண்டு வந்து நீதி கேட்டு ஜெனிவா நோக்கி வீறுநடை போடும் சூழலில், அதற்கு இந்திய தளத்திலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் இலங்கை - இந்தியா மீனவர்களுக்கிடையில் மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளிலிருந்து எமது தமிழ் மக்கள் சார்பாக கலந்து கொள்ளும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் 'நம் கையைக்கொண்டே நம் கண்ணை குத்த வைக்கும்' ஸ்ரீலங்கா அரசின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு விடாமல், கத்தியின் கூரிய விளிம்பில் நடக்க வேண்டிய சூழல் ஒன்றுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டால், வலு கவனமாக எப்படி நம் காலடிகளை எடுத்து வைப்போமோ அதேயளவு கவனத்துடன் செயல்படுமாறும், ஸ்ரீலங்கா அரசின் மிகவும் சூட்சுமமான பொறிக்குள் அகப்பட்டு நாம் மாய்ந்து விடக்கூடாது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .