2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியின் நீர்வரி இடாப்பு புதுப்பிக்கப்படல் வேண்டும்: சந்திரகுமார் எம்.பி

Menaka Mookandi   / 2014 மார்ச் 01 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக மிக நீண்ட காலத்திற்கு முன் தயாரிக்கப்பட்ட நீர் வரி இடாப்பு புதுப்பிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாய நடவடிக்கைகள் மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்கோர் கூடத்தில் நேற்று (28) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

நீர் வரி இடாப்பினை புதுப்பித்தலுக்காக காணிகளின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் பதிவுகளை மேற்கொள்வதற்காக பத்திரிகை மூலம் பொது அறிவித்தல் விடுதல்.

கமநல சேவை நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணத்துடன் படிவங்களை பூர்;த்திசெய்து கையளித்தல்.

பின்னர் பெறுபேற்க்ப்பட்ட விண்ணப்ப படிவங்களுக்கு அமைவாக பிணக்குகள் அற்ற காணிகளை முதலில் நில அளவை செய்யப்பட்டு புதிய பதிவுகளுக்கு உட்படுத்துதல்.

பிணக்குகள் உள்ள காணிகள் தொடர்பில் பிரதேச செயலாளர் மட்டத்தில் ஆராயப்பட்டு தீர்வு காணப்படுதல்.

மேற்படி நடவடிக்கைகளுக்கு ஏதுவாக மாவட்ட செயலகபிரதிநிதி,கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்;, பெரும்பாக உத்தியோகத்தர்கள்,பிரதேச கமக்கார அமைப்பு தலைவர், நீர்பாசனத்திணைக்கள உத்தியோகஸ்தர், கமநல சேவைகள் நிலைய அலுவலர், காணி அலுவலர். அந்தந்த பிரதேசங்களிலுள்ள மூத்த விவசாயி ஒருவர் ஆகியோரை உள்ளடக்கிய உப குழுஒன்றை அமைத்தல்.

இதன் பின்னர் நீர் பங்கு, உரமானிய விநியோகம்,உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளை புதிய பதிவுக்கு அமைவாக மேற்கொள்ளல்.

ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட 06, 07ஆம் வாய்க்கால்கள், பெரிய பரந்தன் பிரதேசங்களில் வரும் மார்ச் மாதம் 07ஆம் திகதி நடவடிக்கைகளை ஆரம்பித்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதனையடுத்து அங்கு உரையாற்றிய சந்திரகுமார் எம்.பி, 'கிளிநொச்சி மாவட்டத்தின் நீர் வரி இடாப்பினை புதுப்பிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. மாவட்ட விவசாயிகளும் இதனை வலியுறுத்தி வருகின்றனர். எனவே நீர் வரி இடாப்பு புதுப்பித்தல் தொடர்பில் உள்ள நடைமுறை பிரச்சினைகளை கலந்தாலோசித்து அதற்கான தீர்வுகளை கண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

மேலும் நீண்டகாலமாக கிளிநொச்சியில் நெற்செய்கை காணி பிணக்குகளும் காணப்பட்டு வருகிறது சிறுபோக காலங்களில் நீர்ப்பங்கு பிணக்குகள் உர மாணியத்தை சீராக வழங்க முடியாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு நீர் வரி இடாப்பினை புதுப்பித்தல் உடாக தீர்வுகளை கண்டு சீரான ஒரு ஒழுங்குபடுத்தலின் கீழ் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதோடு நீர் வரி இடாப்பில் புதிதாக சேர்த்துக்கொள்ள வேண்டிய பிரதேசங்களையும் சேர்த்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணிகள், கழிவு வாய்கால்கள், குளங்களின் காணிகள் என வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் நிலங்களை அத்து மீறி பிடிப்பவர்கள் உண்மையிலேயே இந்த மாவட்டத்தில் ஒரு துண்டு காணி அற்றவர்கள் அல்ல மாறாக வசதி படைத்த, பல இடங்களில் காணிகள் வைத்திருக்கின்றவர்களே இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக நிலங்களை அத்து மீறி பிடித்து வருகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி குளத்தின் பின் பகுதி இவ்வாறு அத்துமீறி பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் வெள்ளபெருக்கு, சீரான கழிவு நீர் அகற்றல், குளம் புனரமைத்தல் உள்ளிட்ட பல விடயங்களில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவே இதில் உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரச அதிபர் எஸ்.ஸ்ரீநிவாசன், வடக்கு மாகாண சபை ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் வை.தவநாதன், கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன், கண்டாவளை பிரதேச செயலாளர் எஸ்.முகுந்தன், கிளிநொச்சி உதவி பொலீஸ் அத்தியட்சர் எட்மன் மகேந்திரா, கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள பிரதி பணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .