2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சுயாதீனமாக இயங்கமுடியாத நிலையில் வடமாகாண சபை: சிவசக்தி ஆனந்தன்

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட தமிழ் மக்களுக்கு அரசு எதனையும் செய்யவில்லை. வடமாகாண சபையும் சுயாதீனமாக இயங்கமுடியாத நிலையில் காணப்படுகிறது' என வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி டாக்டர் சி.வி. சிவமோகனின் ஏற்பாட்டில் லண்டனில் இயங்கும்  'நம்பிக்கை ஒளி' அமைப்பின் நிதி உதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கணுக்கேணி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (3) இடம்பெற்ற இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி டாக்டர் சி.வி. சிவமோகனின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னி வலுவிழந்தோர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரூபாராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்,

'யுத்தத்தினால் பல உயிர்களை எமது மாவட்டம் இழந்துள்ளது. இங்குள்ள மக்கள் தமது உடமைகளை இழந்துள்ளார்கள். பல பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அனைத்தையும் இழந்துள்ள எமது மக்கள் தமது வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். இங்கு வாழும் எங்களுடைய தமிழ் மக்களுக்கு நிறைய தேவைகள் உள்ளன.

இவ்வாறு யுத்தத்தினால் அனைத்தையும் இழந்துள்ள தமிழ் மக்களுக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வாழ்வாதாரத்திற்கும் அவர்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கும் தேவையான அபிவிருத்தி உதவிகளையும், அரசியல் தீர்வுகளையும் பெற்றுத்தருமாறு நாம் அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

எனினும் அந்த பேச்சுவாத்தைகள் எதுவும் பலனளிக்கவில்லை. அபிவிருத்தி உள்ளிட்ட அரசியல் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க இலங்கை அரசு கொஞ்சமும் கூட கவனத்தில் எடுக்கவில்லை. மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு உதவி செய்ய நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் இறுதியில் தோல்வியில் முடிந்தது.

இன்றைய தினம் இட்பெறவுள்ள  ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் பற்றி ஆராயப்படவுள்ளது. அந்த ஜெனீவா மாநாட்டின் பின்னர் இந்த வருடம் தமிழ் மக்களுக்கு ஒரு சுபீட்சமான வாழ்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், ஜெனிவா மாநாட்டின் பின்னரும் வடமாகாண சபையை இலங்கை அரசு சுயாதீனமாக இயங்க விடாமல் செய்தால், அபிவிருத்தி முதல் அரசியல் தீர்வு வரை எதுவும் கிடைக்காமல் போனால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் வடமாகாண சபைக்கு நேரடியாக நிதியை பெற்று அதன் மூலம் எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வோம் என்றார்.

இதன்போது ஏற்கனவே கணினி கண்பரிசோதிக்கப்பட்ட 74 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .