2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர்களை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, வாரிக்குட்டியூர் கணேஷ்வரா மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவரத்திக்குமாறு கோரி பெற்றோர்களும் மாணவர்களும் திங்கட்கிழமை (3.3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பாடசாலையில் கடமைபுரிந்த ஆசிரியர்கள் பலர் அண்மையில் இடமாற்றம் பெற்று சென்றுள்ளதுடன் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இன்றி இப்பாடசாலை இயங்கி வருகின்றது.

இந்நிலையில், பாடசாலை வாயிலைமூடி பாடசாலையின் முன்னால் மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், 'சாதனைகள் படைத்த கல்லூரியை சோதனைக்கு உட்படுத்தாதே', 'நகரவாழ்க்கையை அனுபவிக்கும் உமக்கு கிராம வாழ்க்கை பகடைக்காயா', 'பதவியில் இருந்துகொண்டு பாமரரை எதிர்க்காதே' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

இதன்போது, வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளருக்கு பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக எடுத்துக்கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே தாம் இவ் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபடுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடடியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் வழங்கப்பட்ட மனு தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி சிறந்த தீர்வை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.

இதேவேளை செட்டிகுளம் கோட்ட கல்விப்பணிப்பாளர் எம்.பி.நடராஜா சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் ஒருமாத காலத்தினுள் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும் அதுவரை காலமும் பொறுத்திருக்க முடியாதுள்ளதால் ஒருவாரகாலத்தில் ஆசிரியரை நியமித்து மாணவாகளின் கல்வி நடவடிக்கைகளை சீராக கொணடுச்செல்ல கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாம் தமது போராட்டத்தை தொடர்ந்தம் நடத்துவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.

பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களை பாடசாலைக்குள் நுழையவிடாது பெற்றோரும் மாணவர்களும் மேற்கொண்ட இவ் ஆர்ப்பாட்டம் காலை 8 மணியில் இருந்து மதியம் வரை இடம்பெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .