2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

'வடபகுதி மீனவர்களை வைத்து மத்திய, மாகாண அரசுகள் பிழைப்பு நடத்துகின்றன'

Suganthini Ratnam   / 2014 மார்ச் 04 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடபகுதி மீனவர்களை வைத்து மத்திய, மாகாண அரசுகள் அரசியல் பிழைப்பு நடத்துவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகனால் அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் இந்திய மீனவர்களால் எமது கடல் வளம் அழிக்கப்படவில்லையென்றும்  எமது தொப்புள்கொடி உறவுடன் வாழ்பவர்கள் அவ்வாறு நடக்க மாட்டார்களெனவும் மாறாக தென்பகுதி மீனவர்களும் வெளிநாட்டு மீனவர்களுமே எமது வளங்களை அழிக்கின்றனரென்ற கருத்தை தெரிவித்தார்.

இதற்கு ஒரு படி மேலே  மத்திய கடற்றொழில் அமைச்சர் கடந்த 24.02.2014 அன்று  வழங்கிய செய்தியில் இரு நாட்டு மீனவர்களின் உடன்பாட்டுடன் இப்பகுதியில் தொழில் புரியலாமென தெரிவித்திருந்தார்.

ஆனால், பேச்சுவார்த்தை ஆரம்பித்தவுடன் அமைச்சரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படுவதுடன், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுமென தெரிவித்திருந்தார்.

தற்போது இவர்களின் இவ்வாறான இந்திய மக்கள் மீதும் எல்லை மீறும் மீனவர்கள் மீதும் ஏற்பட்டுள்ள திடீர் காதல் ஏன் என்பதுடன்,  இதன் உள்நோக்கமும் அனைவருக்கும் தெரிகின்றது. இவர்கள் மீனவர்களை எந்தளவுக்கு புரிந்து வைத்துள்ளனர் என்பது தற்போது தெரிகின்றது.

வடபகுதி மீனவர்கள் கடந்த காலங்களில் இந்திய மீனவர்களின் தொழில் முறை மற்றும் அவர்களின் அத்துமீறிய வருகையை எதிர்த்து உண்ணாவிரதம், பாதயாத்திரை ,அமைதி ஊர்வலம், ஆர்ப்பாட்டப் பேரணியென முன்னெடுத்ததை இவர்கள் பிழையென கருதுகின்றார்களா?
மேலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய மீனவர்கள் எமது கடல் வளங்களை கொள்ளையிடுவதுடன், எமது கரைக்கு வந்து இளநீர் குடித்து விட்டு செல்லும் நிலை உள்ளதென தெரிவித்தது வெறுமனே மீனவர்களின் கைதட்டலை பெற்றுக்கொள்வதற்காகவா?  வடபகுதி மீனவர்களுக்காக இன்றுவரை இம்மாகாண சபையில் ஒரு தீர்மானமாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? இவர்களின் பிரச்சினைகள் இச்சபையில் பேசப்பட்டுள்ளதா? எனவே, வடபகுதி மீனவர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்டவர்களை மீனவச் சங்கம் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .