2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இராசபுரத்தில் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீளவும் கையளிக்கவும்: ஆனந்தன் எம்.பி

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னடம்பன் கிராம அலுவலர் பிரிவில் மக்களின் காணிகளை அபகரித்து குடியேற்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை கைவிடுவதற்கு வவுனியா அரச அதிபர் இணங்கியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சின்னடம்பன் கிராம அலுவலர் பிரிவிலுள்ள இராசபுரம் கிராமத்தில் வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களை குடியேற்றவென காடழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (24) கனரக வாகனங்களின் துணையுடன் இராசபுரம் கிராமத்தில் உள்ள மக்களின் வாழிடங்களுக்குள் சென்ற அதிகாரிகள், மக்களின் குடியிருப்புகளை அழிப்பதற்கு முயன்றிருக்கின்றனர்.

அவ்வேளை அங்கு குடியமர்ந்துள்ள மக்கள், தாம் 1985ஆம் ஆண்டு காடுவெட்டி குடியேறியுள்ளதாகவும் அந்தக் கிராமத்தினை நம்பியே வாழ்ந்து வருகின்றமையால் தமது நிலத்தினை அபகரிக்க வேண்டாம் என்றும் மன்றாட்டமாக கேட்டுள்ளனர்.

அதனை விடவும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகளுக்கு பின்னரான அரச காணிகளின் பிணக்குகளைத் தீர்க்கும் துரித வேலைத்திட்டத்தில் 2013ஆம் ஆண்டு பதிவுகளை மேற்கொண்டமை தொடர்பிலான ஆதாரங்களையும் மக்கள் அந்த அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருக்கின்றனர்.

இருப்பினும், அந்தப் பகுதிக்குச் சென்ற அரச அதிபர், அந்த மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவில்லை என்பதை மக்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற நான், அரச அதிபருடன் நீண்ட நேர வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டதன் பின்னர், இராசபுரம் கிராம மக்களுக்கு வேறு இடங்களில் காணிகள் இல்லையேல் அவர்களது காணிகளை திரும்பவும் ஒப்படைப்பதாக அரச அதிபர் வாக்குறுதி அளித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X