2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஊடகவியலாளர் மீதான ஒடுக்குமுறைக்கு கண்டனம்: த.தே.மு

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'தமிழ் ஊடகவியலாளர் மீதான அரச பயங்கரவாத ஒடுக்குமுறைக்கு கண்டனத்தை தெரிவிக்கின்றோம்' என தமிழ் தேசிய முன்னணி சனிக்கிழமை(26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இக் கட்சியின் செயலாளர் பொ.கஜேந்திரனால் வெளியிடப்பட்டுள்ள இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வெள்ளிக்கிழமை(25) மாலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்த யாழ்.ஊடகவியலாளர்கள் மீது பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்ய முயன்றுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர்கள் யாழில் இருந்து கொழும்பு நோக்கி ஹயஸ் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் இவர்களது வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது.

சோதனையிடுதல் என்ற போர்வையில் இவர்களது வாகன சாரதியின் ஆசனத்தின் கீழ் சிகரட் பெட்டி ஒன்றினை ஒரு இராணுவசிப்பாய் வைத்ததை அதில் பயணம் செய்த ஊடகவியலாளர்கள் மூவர் நேரில் அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பொலிசார் வாகனத்தை சோதனையிடுவது போன்று சோதனையிட்டு அந்தப் பொட்டியை எடுத்து அதில் போதைப் பொருள் உள்ளதாக கூறி  வாகனத்தில் பயணம் செய்த ஏழு ஊடகவியலாளர்களையும் வாகன சாரதியையும் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கைதுசெய்துகொண்டு சென்றுள்ளனர்.

இவ்விடயம் உடனடியாக சக ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனடியாகவே கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடன் தொடர்புகொண்டு ஊடகவியலாளர்களது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தூதரக அதிகாரிகளிடம் கோரியிருந்தார்.

பலதரப்புக்களிலிருந்தும் அரசுக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் ஊடக சுதந்திரத்தை நசுக்கும் வகையிலும் இலங்கை அரசு தனது இராணுவ மற்றும் பொலிஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி தமிழ் ஊடகவியலாளர்களை கைதுசெய்வதற்கு மேற்கொண்டுள்ள இந்த அநாகரீகமான செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X