2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கோணாவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் புதிய கற்றல் கூடங்கள் திறந்து வைப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 28 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி, கோணாவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், கொரிய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கற்றல் கூடங்கள், பாடசாலை சமூகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு இன்று (28) நடைபெற்றது.

இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாத நிலையில் அப்பாடசாலைக்கு கொரிய அரசின் நிதியுதவியுடன் 55 மில்லியன் ரூபாய் செலவில் 14 வகுப்பறைகளுடன், கணனி ஆய்வுகூடம், நூலகம் மற்றும் செயற்பாட்டு கூடமென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

முன்பதாக, கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான கொரிய நாட்டுத் தூதுவர் சன் வோன் சன் வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட அதிதிகள், பாடசாலையின் பிரதான வாயிலிலிருந்து நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கொடியேற்றல் நிகழ்வையடுத்து புதிய கட்டிடத்திற்கான நினைவுக்கல்லை கொரிய நாட்டுத் தூதுவர் திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து கணனி ஆய்வுகூடம், விஞ்ஞான ஆய்வுகூடம், வகுப்பறைத் தொகுதிகள் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டன.

பாடசாலை வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட அரங்கில் பாடசாலை அதிபர் இதய சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, கொரிய நாட்டுத் தூதுவர் சன் வோன் சன் மற்றும் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இதன்போது, ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல் ஆகியோருடன் ஜெய்க்கா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட கல்விப்புலம் சார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

ஆயிரம் இடைநிலைப் பாடசாலை அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 21 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 11 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்திக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X