2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'சத்தமில்லாத யுத்தம் செய்யும் ஐனநாயகத்தின் காவலர்களே ஊடகவியலாளர்கள்'

Kogilavani   / 2014 ஜூலை 29 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


'உலக ஒழுங்கில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் பலம் வாய்ந்த அரச இயந்திரத்தை ஒழுங்கமைப்பதிலும் சத்தமில்லாத யுத்தம் செய்யும் ஐனநாயகத்தின் காவலர்களே ஊடகவியலாளர்கள் என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்' என மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண்மாஸ்டர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை(28) வெளியிட்டுள்ள  ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

'கடந்த வெள்ளிக்கிழமை(25) இரவு ஓமந்தைச் சாவடியில் வைத்து ஊடகவியலாளர்கள் மீது இராணுவமும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட அனைத்து நியாயமற்ற அனுகு முறைகளும் இலங்கைத் தீவின் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறி ஆக்கியதோடு தமிழர் பிரதேசத்தில் இராணுவ ஆட்சி நடப்பதையும் உறுதி செய்துள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான மேற்படி சம்பவங்கள், ஆட்சியாளர்களினால் ஊடகவியலாளர்கள் மீது திட்டமிட்ட கால வரிசை கிரமத்தின் படி அரங்கேற்றப்படுகின்றதா என எண்னத் தோன்றுகின்றது.

குறைந்த வருமானத்தில் உயர்ந்த இலட்சியங்களுக்காக இரவையும் பகலாக்கும் மன வலிமை மிக்க சிறந்த உழைப்பாளிகள் ஊடகவியலாளர்கள். மனித வள மேம்பாட்டு  தொழில்துறை வல்லுனர்களால் போற்றப்படும் சக்திமிக்கவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதை ஸ்ரீலங்கா அரசும் முப்படைகளும் பொலிஸாரும் புரிந்து கொள்ளவேண்டும். கஞ்சா வைத்திருக்கும் மட்டமான நிலைக்கு அவர்கள் செல்ல மாட்டார்கள் என்பதை நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் புரிந்து கொள்வார்கள்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதும், கடத்தப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறை இன்றி செயற்படுவதே ஓமந்தைச் சம்பவம் மீண்டும் கோடிட்டு காட்டுகின்றது.

ஊடக சுதந்திரமென்பது இலங்கையில் ஒரு பரிதாபத்துக்குரிய சொல்லாகவே ஊடக அவதானிகள் தொடக்கம் சாதாரன மக்களும் கருதுகின்றனர். ஊடகவியலாளர்கள் கொல்லப்படும்போதும், தாக்கப்படும்போதும் இவர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான அரசில் விருப்பத்தையும் வெளிப்படுத்தவில்லை என்று உலகலாவிய ரீதியில் ஊடவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு (சி.பி.ஜே) குற்றம் சாட்டியிருந்தது.

ஊடகவியலாளர்களை கொலையுண்டு வழக்கு விசாரணைகள் முழுமையாக தீர்க்கப்படாத  நாடுகளின் பட்டியலில் ஈராக், சோமாலியா, பிலிப்பையின்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இலங்கை இருப்பதும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற ஆபத்தான 20 நாடுகளின் பட்டியலில்  இலங்கை  இடம்பிடித்திருப்பதும் இலங்கை அரசாங்கத்தின் ஆசியாவின் அதிசயம் என்ற கனவை கேள்விக்குறியாக்கும்.
ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பிலும் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X