2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குப்பைக் கூழங்களினால் நிறைந்துள்ள மன்னார் பொது சேமக்காலை

Menaka Mookandi   / 2014 ஜூலை 30 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பொது சேமக்காலை வளாகத்தினுள் மன்னார் நகரப்பகுதிகளில் அகழ்வு செய்யப்படுகின்ற குப்பைக் கூழங்கள் கொட்டப்படுவதினால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக மன்னார் மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொது சேமக்காலையில் இந்து மக்களின் தகனம் மற்றும் அடக்கத்திற்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகாமையில் கத்தோழிக்க மக்களுக்கும் அதற்கு அருகாமையில் கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோரின் சடலங்கள் அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டு பராமறிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் நகரசபை பிரிவுக்குற்பட்ட பகுதியில் மன்னார் நகர சபையினால் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுப்பொருட்கள், மன்னார் பொது சேமக்காலை வளாகத்தின் பின் பகுதியில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றது.

இதனால், மன்னார் பொது சேமக்காலை பகுதியில் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதோடு புனிதமாக பராமறிக்கப்பட வேண்டிய இடம், அசுத்தம் நிறைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த கழிவுகள் கொட்டப்படுவதினால் கழுதைகள், நாய், காகம் ஆகியவை குறித்த கழிவுப்பொருட்களை சாப்பிடுவதற்கு அதிகளவில் வருவதோடு சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கல்லறைகளையும் நாசப்படுத்துவதாகவும் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைச் சுற்றி குப்பை கூழங்கள் காணப்படுவதாகவும் மக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

எனவே, மன்னார் நகரசபை இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி, சேகரிக்கப்படுகின்ற குப்பைக் கூழங்களை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் மன்னார் நகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் நகர சபையின உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸை தொடர்பு கொண்டு கேட்டபோது,

தற்போதைய சூழலில் மன்னார் நகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை கொட்டுவதற்கு எமக்கு இடப்பிரச்சினை ஏற்பட்டுள்ள காரணத்தினால் அன்றாடம் சேகரிக்கின்ற குப்பை கூழங்களை சேமக்காலைக்கு பின் பகுதியிலே கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் சேமக்காலை ஒரு புனிதமான இடம். அவ்விடத்தை மாசுபடுத்துவது சரியான நடவடிக்கை அல்ல என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளுகின்றோம்.

நாங்கள் மன்னார் பிரதேசச் செயலாளருடன் ஏற்படுத்திய கலந்துரையாடலையடுத்து சேமக்காலைக்கு பின் பகுதியில் உள்ள கடற்கரையை அண்மித்த பகுதியில் மன்னார் நகர சபைக்கு 5 ஏக்கர் காணியினை குப்பை கொட்டுவதற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அக்காணி வழங்கப்படும் பட்சத்தில் தற்போது சேமக்காலைக்கு பின்புறம் கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட்டு மன்னார் சேமக்காலையை சுத்தமான முறையில் பராமறிக்க நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்படும் என மன்னார் நகரசபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X