2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மன்னார் நகர சபைக்கு சொந்தமான காணி அபகரிப்பு; பொலிஸில் முறைப்பாடு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் உள்ள மன்னார் நகர சபைக்குச் சொந்தமான காணியினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபையினால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் நேற்று (31) வியாழக்கிழமை இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் தெரிவு செய்யப்பட்ட 5 ஏக்கர் காணி, கடந்த 1999ஆம் ஆண்டு மன்னார் நகரசபைக்கு பூங்கா அமைத்தல் மற்றும் மூலிகைத்தோட்டம் அமைத்தல் போன்றவற்றிற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டது.

குறித்த காணியை கடந்த 15 வருடங்களாக மன்னார் நகர சபையினால் பராமறிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு காணி சீர்திருத்த ஆணைக்குழு (எல்.ஆர்.சி) ஊடாக தனிநபர் ஒருவருக்கு குறித்த காணி வழங்கப்பட்டதாக கூறி குறித்த நபர், மன்னார் நகர சபைக்கு வந்து வரி செலுத்த முற்பட்ட போதே குறித்த காணி தனிநபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிந்தோம்.

இந்நிலையில், மன்னார் நகரசபை காணி சீர்திருத்த ஆணைக்குழு (எல்.ஆர்.சி) உடன் தொடர்பு கொண்டு குறித்த காணி தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்தோம்.

மன்னார் நகரசபையின் மாதாந்த பொதுக்கூட்டம் கடந்த வாரம் மன்னார் நகர சபையில் இடம்பெற்ற போது நகரசபையின் உப தலைவரினால் குறித்த காணி பிரச்சினை, சர்ச்சையாக முன்வைக்கப்பட்டதோடு குறித்த காணி பிரச்சினை தொடர்பில் உடனடியாக உரிய சட்ட நடவடிக்கையை மன்னார் நகரசபை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (31) மன்னார் நகர சபையில் குறித்த காணி தொடர்பான அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், முத்தலீப் பாரூக் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம், மன்னார் நகரசபையின் செயலாளர், உப தலைவர், உறுப்பினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு அமைவாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவும் குறித்த காணி அபகரிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று (31) வியாழக்கிழமை, மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று குறித்த காணி பிரச்சினை தொடர்பாக நகரசபை தலைவரின் பெயரில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த காணியில் இருந்த தனிநபர், பொலிஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

குறித்த காணி தொடர்பில் வழக்கை முன்னெடுப்பது தொடர்பில் நகரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X