2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'பொது பல சேனாவின் நடவடிக்கைகளை ஏற்குமாயின் அரசு பாரிய விளைவுகளை சந்திக்கும்'

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பொது பல சேனா அமைப்பின்; நடவடிக்கைளை அரசு ஏற்று செயற்படுமாக இருந்தால் பாரிய விளைவுகளை அரசாங்கத்தினால் சந்திக்க நேரிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அமைப்பாக பொது பல சேனா என்ற இனவாத அமைப்பு திகழ்கிறது. குறித்த அமைப்பு இனவாதத்தை தூண்டுகின்ற ஒரு அமைப்பாக செயற்படுகின்றது. அந்த வகையிலே மன்னார் மாவட்ட ஆயரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வெளியிட்டுள்ளது. இக்கருத்து மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய கருத்தாகும்.

மக்களின் பிரச்சினைகளை நீதியான முறையில் வெளிக்கொண்டு வருவது ஆயரின் வழக்கம். தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகள், அநீதிகள், இராணுவத்தின் பிரசன்னம், மனித உரிமை மீறல்கள் போன்ற மக்களின் பிரச்சினைகளை அவரின் செயற்பாட்டின் ஊடாக வெளிக்கொண்டுவருகிறார். இதனைத்தான் மன்னாரில் இடம்பெற்ற காணாமல் போனவர்கள் தொர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவிடமும் தெரிவித்தார்.

ஜனநாயகம் என்று பேசப்படுகின்ற இந்த நாட்டில், கருத்துக்கள் கூறப்படுகின்ற போது வெளிவரும் மாற்றுக் கருத்துக்களைப் பார்க்குமிடத்து, இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. இந்த நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. எங்களுடைய மக்கள் இராணுவத்தினரால் நசுக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் தனது கருத்தை நேர்மையாகச் சொன்ன ஆயரை, கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்வைத்துள்ளார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நியாயவாதிகளை அடக்க நினைப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் என்பதனை கூற விரும்புகின்றேன்' என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X