2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தவறுதலாக அடக்கம் செய்யப்பட்ட சடலம் மீண்டும் தோண்டியெடுப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நீதிமன்றம் உத்தரவிடாப்படாமல் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத சடலம் மன்னார் நீதவானின் உத்தரவுக்கு அமைய சனிக்கிழமை (04) காலை 9 மணியளவில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் வங்காலை கடற்படை முகாமிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் கடந்த 03-09-2014 அன்று, குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியதுங்கியுள்ளது.

குறித்த சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி தே.பி.சிந்தாத்துரை, குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் இரண்டு வாரங்களுக்கு வைக்குமாறும் அடையாளம் காணாது விட்டால் பிரேதப்பரிசோதனையின் பின்  அரச செலவில் அடக்கம் செய்யுமாறும் உத்தரவிட்டார்.

அதே போன்று, மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் கடந்த 15-09-2014 அன்று உருக்குலைந்த நிலையில் இரண்டாவது சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டவாது சடலத்தை பார்வையிட்ட மரண விசாரணை அதிகாரி அதனை அடையாளம் காண்பதற்காக இரு வாரங்களுக்கு மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில்  பாதுகாப்பாக வைக்கும்படியும் பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட பின் அரச செலவில் குறித்த சடலத்தை அடக்கம் செய்யும் படியும் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மன்னார் வங்காலை கடற்கரையில் கடந்த 3-09-2014 அன்று முதலில் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன்  பின்னர், 24.9.2014 அன்று அரச செலவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால்,  பிரேதப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட  குறித்த சடலத்தை அடக்கம் செய்வதற்கு பதிலாக, இரண்டாவது தடவையாக மன்னார் சௌத்பார் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் தவறுதலாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் சௌத்பார் கடற்கரைப்பகுதியில் இரண்டாவது தடவையாக மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனை செய்து அரச செலவில் புதைப்பதற்கு 29.9.2014 அன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, குறித்த சடலம் மாறி புதைக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இரண்டு சடலங்கள் தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை (02)  மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் புதைக்கப்பட்ட சடலத்தை, நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேதப்பரிசோதனைக்கு உற்படுத்துமாறு உத்தரவிட்டார்.

 நீதவானின் உத்தரவுக்கமைவாக புதைக்கப்பட்ட சடலம் இன்று சனிக்கிழமை (04) காலை 9 மணியளவில் மன்னார் பொது மயானத்தில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம்,சட்ட வைத்திய அதிகாரி என்.ஐ.வி.இருசானா ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

இதன்போது மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வி.ரூபன் லெம்பேட், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரஜனி அன்ரன் சிசில் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் குறித்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

இச்சடலமானது விஷேட குற்றவியல் ஆய்வு பிரிவு பொலிஸார் மற்றும் பணியாளர்களினால் தோண்டியெடுக்கப்பட்டது. தற்போது குறித்த சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .