2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இழுவைமடிக்கான தடை நியாயமானது: என்.எம்.ஆலம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இழுவைமடித் தொழில்முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நியாயமானதே. அதனால், மீனவர்கள் இத்தொழில் முறையை கைவிட்டு மாற்றுத் தொழில்முறைக்கு மாறவேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பினரின் இழுவைப்படகு தொழிலை தடை செய்ய வேண்டாம் எனும் தொனியிலான போராட்டத்தின் நியாயத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

ஏனெனில், இத்தொழிலானது கடல் வளத்தையும் மீன் இனங்கள் வாழும் கற்பாறைகள் மற்றும் கடற் தாவரங்களையும் அழிக்ககூடியது. அதனால், இது கடல் சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத ஒரு தொழில் முறையாகும்.

இழுவைப்படகில் பயன்படுத்தப்படும் இழுவைமடி வலையின் அடிப்பகுதி மிகவும் குறுகிய இலைகளை கொண்ட கண்ணியாகும். மேலும், இந்த மடி வலையின் இரு பகுதிகளிலும் பயன்படுத்தப்படும் இரண்டு இரும்புச் சட்டம் பொருத்தப்பட்ட பலகைகள் ஒவ்வொன்றும் சுமார் 50 கிலோவுக்கும் மேற்பட்ட எடையைக் கொண்டனவாகும்.

இவ்வலையை கடலில் இறக்கியதும், கடல் ஆழத்தின் மணற்பகுதியை இரண்டு அங்குலத்துக்கும் மேலான நிலத்தை வராண்டி அனைத்து விதமான கடற்தாவரங்கள், அதில் தங்கியுள்ள மீன் முட்டைகள், கடல் வாழ் உயிரினங்கள், சிறிய மீன் இனங்கள் என அனைத்துமே அழிக்கப்படுகின்றன.

ஒரு படகின் மூலம் மணித்தியாலத்துக்கு 10 அடி அகலமும் 1000 அடி நீளமும் கொண்ட கடற் பகுதி வெறுமையக்கப்படுகின்றது. மேலும் இத்தொழில் ஆழமற்ற, ஆழமான கடற்பகுதியில் வருடம் முழுவதும் செய்யப்படுவதால் எண்ணிப்பார்க்க முடியாத அளவு கடல் வளம் அழிக்கப்படுகின்றது.

இதனை மீனவர்கள் உணர்ந்ததால் இத்தொழில் முறைக்கு தடை விதிக்குமாறு அரசுக்கு பரிந்துறை செய்யப்பட்டதன் பொருட்டு இத்தொழிலை அரசு தடை செய்துள்ளது. இத்தொழிலானது மன்னாரில் ஒரு சிலராலும் தென் பகுதி மீனவர்கள் சிலராலும் செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

இத்தொழிலை மேற்கொள்பவர்கள், இதனைத் தங்களுக்கு எற்ற வகையில் நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் ஆணையை நடைமுறைபடுத்த வேண்டிய திணைக்களமும் அதன் அதிகாரிகளும் இதனை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் அசட்டையாக உள்ளதே இதற்கான காரணமாகும்.

எமது கடல்வளம் அழிக்கப்படுமானால் அது அனைவராலும் தடுக்கப்பட வேண்டும். யுத்தத்தினால் அழிந்து போன நிலத்தையும் இலுவை மடியினால் அழிந்த கடலையும் நாம் எமது எதிர்கால சந்ததிக்கு விட்டு வைக்கப்போகின்றோமா என்பதை, இத்தொழிலை நியாயப்படுத்துவோர் சிந்திக்கவேண்டும்.

200 படகுகளுக்காக இத்தொழிலை அனுமதிக்குமாறு கோரும் இவர்கள், அது சாத்தியமாகும் பட்சத்தில், அதன் தாக்கம் கடற்பரப்பில் படகுகளின் எண்ணிக்கையை கூட்டும் என்பதினை நாம் கூறத்தேவை இல்லை. மாகாண அரசும் மாகாண சபை உறுப்பினர்களும் கடல்வளத்தை அழிக்கும் இத்தொழிலுக்கு துணை நின்று சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடாதீர்கள்.

இழுவைப்படகின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தற்போது தூண்டில்கள் மூலம் மீன் பிடிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இழுவைமடி வலைகளுக்கே இந்த தடையே தவிர, இழுவை படகுகளின் தொழில் முறைகளுக்கு இந்த தடை இல்லை என்பதை புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.

இம்மீனவர்களும் இவர்களின் வாழ்வாதரத்திற்கு அக்கரையுடன் குரல் கொடுக்கும் அரசியல் பிறமுகர்கள், சமூகப் பற்றாளர்கள் ஆகியோர், மாற்று தொழில்முறைக்கு போதிய இழப்பீட்டினை அரசின் ஊடாக அல்லது அரசு சார்பற்ற நிறுவனம் அல்லது மாகாண அரசின் ஊடாக பெற்று வழங்குவதுடன் இந்த இழுவைமடி தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய தொழில் முறைக்கு இவர்களை ஊக்குவித்து எமது எதிர்கால சந்ததிக்கும் இக்கடல் வளத்தை பாதுகாத்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .