2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வேசங்கள் வெளிப்பட்டுவிடும் என்பதால் அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தை கூட்டமைப்பினர் புறக்கணித்தனர்: டக

George   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்றிருந்தால் அவர்களது வேசங்கள் அம்பலமாகிவிடும் என்பதற்காகவே அவர்கள் அக் கூட்டத்தில் பங்கேற்கவில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுடான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சில காலங்களுக்கு முன்னர் இங்கு அமைதியற்ற, சுதந்திரமற்ற சூழலே இருந்து வந்தது. எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்கின்ற அச்சநிலையே இருந்தது.

ஆனால், தற்போது அந்த நிலை முற்றாக மாற்றியமைக்கப்பட்டு ஒரு அமைதிச் சூழல் நிலவுகின்றது. இருந்த போதிலும் இவ்வாறான அமைதியான சூழலில் அரசு பல்வேறுபட்ட அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆனாலும், இதை விரும்பாத சுயலாப அரசியல்வாதிகள் பொய்த்தனமான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை குழப்பி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் எனது அழைப்பை ஏற்று வடபகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களின் தலைமையில் வீரசிங்கம் மண்டபத்தில் மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர்கள் அதை புறக்கணித்திருந்தனர்.

அவ்வாறு அக் கூட்டத்தை புறக்கணித்ததன் காரணம் வடக்கில் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூடிமறைத்து வருகின்றனர்  என்பதுடன் ஏனைய மாகாணங்களை விடவும் வடக்குமாகாணத்திற்கு அதிகளவு நிதி அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும் அதில் மிகக் குறைந்தளவிலான நிதியினையே வடக்கு மாகாண சபை செலவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

வடபகுதியின் அபிவிருத்திக்கு அரசும், வடமாகாண ஆளுநரும் தடையாக இருக்கின்றனர் என பல்வேறுபட்ட உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களது பொய் பிரசாரங்கள் தொடர்பில் இந்த அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துரையாடப்படும் போது எல்லாவிதமான பொட்டுக் கேடுகளும் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினாலேயே அவர்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்தனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இருந்தபோதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட்டத்தை புறக்கணித்திருந்த போதிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளில் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இதனிடையே மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளது தேவைகள், பிரச்சினைகள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வலுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் லிங்கேஸ், ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட உதவி அமைப்பாளர் சந்துரு  பனை அபிவிருத்தி சபையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பீரிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .