2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரசியல் எமது நிர்வாகத்தை சீரழிக்கின்றது: சி.வி

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

அரசியல் எமது நிர்வாகத்தை சீரழிக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கான, வட மாகாணசபையின் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நடமாடும் சேவையொன்றை நடாத்தி, மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என பல மாதங்களாக எண்ணிக்கொண்டிருந்தோம். எனினும் பல காரணங்களால் இதனை தள்ளிப்போட்டுக்கொண்டு வரவேண்டியேற்பட்டது.

தற்போது நாம் இங்கு நடமாடும் சேவையை நடத்த எத்தனிக்கும் போதும் பல சிக்கல்களையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டே நடத்த வேண்டியுள்ளது. பிரதம செயலளார் இன்று சமூகமளிக்கவில்லை. இது பற்றி அவருக்கு பல நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டாலும் அவர் கொழும்புக்கு போய் விட்டதாக அறிகின்றோம்.

ஏன் உங்களால் நடவடிக்கை எடுக்க முடியாதா என கேட்பீர்கள். ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய பொதுச்சேவைகள் ஆணைக்குழுவே, என்று புதியதொரு கருத்தை, அரசாங்கத்தால் அண்மையில் அடையாளம் காட்டப்பட்ட பிரதம நிதியரசர் நாம் கேட்காமலேயே உள்ளடக்கியுள்ளார்.

ஆகவே எந்தளவுக்கு எமது நடவடிக்கைகளில் ஆளுநரும் பிரதம செயலாளரும் பங்குபற்றுவார்கள் என்பதில், கருத்து வேற்றுமைகள் உருவாகியுள்ளன. எது எவ்வாறு இருப்பினும் மக்களின் நலன் சார்ந்தே இந்த நடமாடும் சேவையை நாம் தயார் செய்துள்ளோம்.

இந்நிலையில் நீங்கள் உங்கள் குறை பற்றி எழுதினால், அதனை படித்து விட்டு எமது சிரேஷ்ட அதிகாரியிடம் அது பற்றி அறிக்கை கேட்கின்றேன். அவர் தனக்கு கீழ் உள்ள அந்தந்த மாவட்ட அல்லது பிரதேச அலுவலரிடம் அறிக்கை கேட்கின்றார். அவர் நீங்கள் வசிக்கும் பிரதேசத்துக்கு அண்மையில் உள்ள செயற்பாட்டு அதிகாரியிடம் அறிக்கை கேட்கின்றார்.

அவர் உங்களிடம் பிரச்சனைகளை கேட்டு அறிந்து அறிக்கையினை தனக்கு மேலுள்ள அதிகாரியிடம் வழங்க, அவர் அதனை எமது செயலாளருக்கு அனுப்பி என்னிடம் அதனை சமர்ப்பிக்கின்றார்.

அதன் பின்னர் தான் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என ஆராய்;து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இச் செயற்பாட்டுக்கு குறைந்தது இரண்டு மாதகாலம் எடுக்கின்றது. எனவே, அதனை விடுத்து உரிய அதிகாரிகள் உங்கள் அருகிலிருந்து உங்கள் குறைகளை கேட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடமாடும் சேவையை செயற்படுத்துகின்றோம்.

திரை மறைவில் நின்று சோம்பேறித்தனத்தால் தாமதிப்பதும் வேறு எதிர்பார்ப்புகளை எதிர்பார்த்து தாமதிப்பதும் இதன் மூலம் தவிர்க்கப்படுகின்றது. அலுவலர்களும் ஒருங்கே இருப்பதனால் தீர்மானங்களை எடுப்பதற்கும் இது உதவுகின்றது.

முறையாக நடவடிக்கை எடுக்க எத்தனிக்கும் அலுவலரைக்கூட அரசியல்வாதிகள் தண்ணீர் இல்லா காட்டுக்கு அனுப்பிவிடுவோம் என்ற தண்டனையை காட்டி, தமது வேலைகளை சாதித்து கொள்கின்றார்கள்.

இந்த அரசியல்வாதிகளுக்கு தேவையானது அடுத்த தேர்தலில் தமது வெற்றி அல்லது தமது இனத்தின் விருத்தியும் மேம்பாடும் அல்லது தமது அருவருடிகளின் அன்பும் அனுசரணையும் ஆகும்.

நடைமுறைப்படுத்தப்படும் வேலைகள், காலக்கிரமத்தில் அதிர்ச்சி தரக்கூடிய பின்விளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வி அவர்கள் மனதில் எழுவதில்லை. எனவே அவற்றை தவிர்த்து வெளிப்படையாக சட்டதிட்டங்களுக்கு அமைவாக நியாயமான முறையில் தீர்மானங்களை எடுக்க இந்த நடமாடும் சேவை உதவி அளிக்கின்றது.

பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டை இந்த நடமாடும் சேவை மூலம் நாம் முன்னிலைப்படுத்துகின்றோம். பல மக்கள் எங்களிடம் குறை கூறுவது யாதெனில், நாங்கள் எத்தனை கடிதங்கள் அனுப்பினோம். எத்தனை முறை சென்று சந்தித்தோம். அதற்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது தான். இதனை தவிர்த்து மக்களின் குறைகளை தீர்த்து வைப்பத்தில் இருக்கும் சிரமங்களை வெளிக்கொண்டு வந்து, அவற்றை ஆராய்ந்து பார்த்து முடியுமான வரை அவற்றை தீர்த்து வைக்க முடிகின்றது இவ்வாறான நடமாடும் சேவைகள்.

எது சரி எது முறை எது நியாயம் என சட்டப்படி செயலற்ற முனைவதுதான் நடமாடும் சேவையின் குறிக்கோள்.

இன்று சில அலுவலர்கள் வராது இருப்பதால் மக்கள் சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கலாம். அதற்காக நாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் குறைகளை குறித்துக்கொண்டுபோய் அல்லது பதிவு செய்துகொண்டுபோய் ஒருசில நாட்களுக்குள் தீர்வினை பெற முயற்சி செய்வோம் என்று தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .