2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அரசு மக்களின் காணிகளை அபகரித்து கொண்டு வெட்கமின்றி அவர்களிடமே அரசு வாக்கு கேட்கின்றது : ராஜித

Sudharshini   / 2014 டிசெம்பர் 30 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

இந்த அரசு மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டு வெட்கமின்றி அவர்களிடமே வாக்குகளை கேட்கின்றது. அத்துடன், பாதுகாப்பு செயலாளரும் ராஜபஷ குடும்பமும் இணைந்து இங்கு வாக்கு மோசடியில் ஈடுபட திட்டம் தீட்டியுள்ளது என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா வைரவ புளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வட பகுதி மக்கள் அனைவரும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்குவது என முடிவெடுத்துவிட்டார்கள். ராஜபஷ குடும்பத்தினர் பணத்தை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். அவ்வாறு உங்களுக்கும் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். அவ்வாறு பணத்தை வாங்கிய பின்னர், அந்த பணத்தில் வாகனங்களில் வந்து அன்ன சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

வட மாகாண மக்கள் 30 வருட காலமாக நடந்த யுத்தத்தால் அல்லலுற்றவர்கள். ஆனால், இன்று நடைபெறுவது என்ன? அதிவேக பாதைகள் அமைக்கின்றார்கள். அதனை யார் அமைக்கின்றார்கள். இந்தியாவிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் தொழிலாளர்களை அழைத்து வந்து நிர்பான பணிகளை மேற்கொள்கிறார்கள். இதனால், எமது நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான வேலை வாய்ப்புகளும் வழங்கவில்லை.

இவ்வாறு வேலைகளை செய்யும் போது இப்பகுதி ஒப்பந்தகாரர்களுக்கு வேலைகளை வழங்க வேண்டும் என கோரியிருந்தேன். 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் இப்பகுதி மக்களுக்கு எந்தவிதமான ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளையும் அரசாங்கம் வழங்கவில்லை.

இப்பகுதி மக்கள் அதிவேக பாதைகளை அறிந்திருக்கவில்லை. இப்பகுதி மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதில் பலன் இல்லை. ஏனெனில், அவர்களிடம் மின்சார கட்டணத்தை வழங்க பணம் இல்லை. நீர் விநியோகத்தை வழங்குவதிலும் பலன் இல்லை. ஏனெனில், அந்த பட்டியல் பணத்தை செலுத்த பணம் இல்லை.

இது தொடர்பாக அமைச்சரவையில் பேசுகின்ற போது இந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் டக்ளஸ் தேவானந்தா வாய் மூடி மௌனித்திருந்தார். நான் டக்ளஸை பார்த்து சொன்னேன். நீங்கள் உங்கள் பகுதி மக்களுக்கு துரோகியாக இருக்கின்றீர்கள். தற்போது இந்த மக்களுக்கான சேவையில் டக்ளஸ் சேர்ந்திருக்க முடியும். ஆனால், அவர் வாயில் பூட்டிட்டிருப்பது போல் இருக்கின்றார். காரணம் தனக்கு கிடைத்த வசதிவாய்ப்புகளை பாதுகாத்துக்கொள்வதற்காக மட்டுமேயாகும்.

ஆனால், ரிசாட் பதியுதீன் எந்த நேரமும் மக்களுக்காக அமைச்சரவையில் குரல்கொடுப்பதை நான் கண்டிருக்கிறேன்;. நான் சந்திரகுமார் எம்.பி.க்கு முன்னால் வைத்தே கேட்டிருக்கின்றேன் ஏன் மக்களுக்காக குரல் கொடுக்காமல் பயந்து இருக்கின்றீர்கள் என்று. ஆனால், வட பகுதி மக்களுக்காக நான் அமைச்சரவையில் பல தேவைகளை கேட்டிருக்கின்றேன்.

இந்த மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை முன்னரே இருந்திருந்தால், நாங்கள் சொல்வதை முன்னமே கேட்டிருந்தால் இன்று இந்நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்காது என அவர் தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .