2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பதியுதீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முஸ்தீபு

Menaka Mookandi   / 2015 ஜனவரி 01 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்த காலத்தில் அரசியல் தேவைக்காக முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் மத்திய நிலையத்தை சுவீகரித்துள்ளதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளன தலைவர் பாஸ்கரன் விஜிதரன் வியாழக்கிழமை (01) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

2012ஆம் ஆண்டு யுனிசெவ் நிறுவனத்தின் நிதியுதவியுடன், இளைஞர்களின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதி மூலம் முள்ளியவளை மத்தி பொதுநோக்கு மண்டபத்தில் இளைஞர் மத்திய நிலையம் அமைக்கப்பட்டது. கட்டிட வேலைகள் செய்யப்பட்டதுடன், மின்இணைப்பு மற்றும் கணினிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, சிங்களம் மற்றும் ஆங்கில வகுப்புக்களை நடத்தி வந்தோம்.

ஒரு மாதத்துக்கு முன்னர், தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல்வாதிகளால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தையல் பயிற்சி ஆரம்பிப்பதற்காக, ரிஷாட் பதியுதீன் கட்டிடத்தின் திறப்பை இளைஞர் சேவை அதிகாரியிடம் பலவந்தமாக வாங்கி தையல் பயிற்சியை நடத்தி வருகின்றார். இளைஞர்கள் மத்திய நிலையத்துக்குள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இளைஞர் சேவைகள் மன்ற உயரதிகாரிகள், பிரதேச செயலாளர், மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்து எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இதனால், எமக்காக உரிய தீர்வு கிடைக்கும் வரையில் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளன  மற்றும் கரைதுறைப்பற்று இளைஞர் கழக பிரதேச சம்மேளன உறுப்பினர்கள் தாங்கள் பதவி விலகுவதாகவும், வெள்ளிக்கிழமைக்கு (02) முன்னர் தீர்வு இல்லாவிடின் சனிக்கிழமை (03) இளைஞர் மத்திய நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .