2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நல்ல செயற்பாடுகளுக்கு த.தே.கூ. என்றும் ஒத்துழைக்கும்: சிவசக்தி

Gavitha   / 2015 ஜனவரி 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

நல்ல செயற்பாடுகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வன்னி நாடாளுமன்ற  உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

புதிய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகள் என்ன என்று அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

'நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லீம் மக்கள் குறிப்பாக மலையக மக்களும் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதை கருத்தில் வைத்தே இத்தேர்தலில் வாக்களித்துள்ளார்கள்.

கடந்த 10 வருடமாக இருந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், சிறுபான்மை மக்கள் சொல்ல முடியாத பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளனர்.  இதன் காரணமாகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.

ஆகவே, மைத்திரிபால சிறிசேன தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகளோடே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதனால், அவருக்கு மிகப்பெரிய பொறுப்புகளும் சவால்களும் காத்திருக்கின்றது.

அவற்றில் முக்கியமாக, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய மனிதாபிமான பணிகள் மற்றும் இந்நாட்டில் நீண்ட காலமாக தீர்க்கப்படாது உள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய தேவை இருக்கின்றது.

அந்த வகையில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், மிக உடனடி மனிதாபிமான பணிகள் இருக்கின்றது. குறிப்பாக இந்த நாட்டில் 20 வருடங்களுக்கு அதிகமாக பல இளைஞர்கள் இலங்கையின் பல சிறைகளிலும் அரசியல் கைதிகளாக தண்டனைக்கு மேல் தண்டனையை அனுபவித்து இன்று ஒரு மனநோயாளிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களது குடும்பம், பிள்ளைகள், கல்வி என்பன மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. எனவே, ஜனாதிபதி என்ற வகையில் அவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்யவேண்டும்.

வடக்கு, கிழக்கில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சொந்த மண்ணில் மீளக்குடியேற முடியாமல் வாழ்கின்றார்கள். அவர்களுக்கான காணிகளை ஒப்படைத்து மீளக்குடியேற அனுமதிக்க வேண்டும்.

அத்துடன், போர் காரணமாக 80,000க்கும் மேற்பட்ட, பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் நிர்க்கதியற்று வாழ வழியில்லாமல் இருக்கின்றார்கள். அதிலும் இளம் விதவைகள் தமக்கான கல்வி, பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

காணாமல் போனோரின் குடும்பங்கள் பல ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு காணமல் போன உறவுகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது தொடர்பில் உடன் அறிவிக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இவை உட்பட தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி, மீள் ஒப்படைக்கப்பட வேண்டும். இவ்வாறான உடனடி மனிதாபிமான பணிகள் உள்ளது.

இவற்றுடன் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பல ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தைகள் செய்யப்பட்டு எதுவும் பயனளிக்கவில்லை. ஆகவே பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் இந்த வாக்குகளை அளித்துள்ளார்கள்.

ஆகவே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை காணுவதற்கும் நிரந்தர சமாதானத்தை காணுவதற்கும் இந்த அரசாங்கம் கவனத்தில் கொண்டு  செயற்படவேண்டும். இந்த நல்ல விடயங்களை செயற்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு எப்போதும் தயாராக உள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட எமது மனிதாபிமான பிரச்சனைகளை முன்வைக்கவில்லை என்ற ஆதங்கம் எமது கட்சிக்குள்ளும் இருந்தது. இது தமிழ் மக்கள் மத்தியிலும் இருந்தது. இவ்வாறு இருந்தாலும் கூட ஆட்சி மாற்றத்தின் ஊடாக இவர்கள் இந்த பணிகளை செய்வார்கள் என்று நம்பிக்கை இருக்கின்றது' என்று தெரிவித்தார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கும் அமைச்சு பதவிகளை பெறுவதற்கும் தயாராக உள்ளதா என்று வினவிய போது, 'இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அங்கங்களான நாடாளுமன்ற குழு, தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்கான ஒருங்கிணைப்புக் குழு என்ற இரு முக்கிய அமைப்புகளும் கூடி, அரசாங்கத்துடன் எதிர்காலத்தில் எவ்வாறு எப்படி செயற்படுவது என்பது தொடர்பில் முடிவெடுக்கும்' என்று தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .