2025 ஜூலை 23, புதன்கிழமை

அவதானம் இல்லாது இருந்தால் நாம் அழிந்துவிடுவோம்: சிறிதரன்

Gavitha   / 2015 ஜனவரி 24 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்


தற்போதைய ஆபத்தான காலத்தில் அவதானம் இல்லாது இருந்தால் நாம் அழிக்கப்படுவோம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சனிக்கிழமை (24) தெரிவித்தார்,


வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.


'ஒரு விடுதலையை நோக்கி பயணிக்கின்ற தேசிய இனம் தனது அடையாளங்களை நிலை நிறுத்துவதற்கும் தமது மக்களையும் போராளிகளையும் சந்தித்து அவர்களினுடைய பிரச்சனைகளை ஆராய்வதற்கும் அலுவலகங்கள் இருப்பது முக்கியமானவை.


தமிழர்கள் என்பது ஒரு தேசிய இனம் தவிர நாங்கள் ஒரு சிறுபான்மை இனம் அல்ல. எங்களில் பலருக்கு இது தொடர்பில் மயக்கங்கள் உள்ளது. ஆகவே, மயக்கத்தில் இருந்து தெளிய வேண்டும். சுயநிர்ணய உரிமைக்காக இன்று, நேற்று அல்ல 70, 80 ஆண்டுகளுக்கு மேலாக போராடுகின்ற ஒரு இனமாகும். சுயநிர்ணய உரிமையை கேட்பதற்கு நாங்கள் வரலாற்று ரீதியான ஒரு நிலப்பரப்பை கொண்டிருக்க வேண்டும். அந்நிலப்பரப்பை நாங்கள் கொண்டிருக்கின்றோம். அத்துடன் மொழி, கலாசாரம் என்பவற்றையும் இந்த பூமி பந்தில் வைத்துள்ள ஒரு இனம்தான் தமிழர்கள்.


நாங்கள் தேசிய இனம் என்ற ரீதியில் தான் எங்கள் உரித்தை நாங்கள் கேட்கின்றோம். அண்மையில் பொஸ்னியாவில் வழங்கப்பட்ட சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, ஏற்கெனவே சுவிஸ் நாட்டில் உள்ள சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, அமெரிக்காவில் உள்ள சமஸ்டி கூட வித்தியாசமான சமஸ்டி, இந்தியாவில் உள்ள மொழி வாரியான சமஸ்டியும் இருக்கின்றது.


ஆகவே, அந்த அடிப்படையில் எங்களது சுய உரிமையை இழக்காமல் எங்களை நாங்களே ஆளுகின்ற சுயநிர்ணய தத்துவத்தின் பிரகாரம் நாங்கள் எங்களுக்கான ஆட்சி உரிமையை கேட்பது எங்களது முக்கியமான கடமையாகும்.
அதற்காகத்தான் நாங்கள் இந்த மண்ணிலே 40,000 அதிகமான போராளிகளை புதைத்துள்ளோம். அவர்களது கல்லறைகளுக்கு கண்ணீரை சிந்த முடியாதவர்களாக இருக்கின்றோம்.


ஒருபெரும் போர் நடத்தி முடிந்து அதில் நாம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இருந்த ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் தமிழர்கள் தங்களுடைய முனைப்பை காட்டுகின்றார்கள். அதற்காகத்தான், நாங்கள் கடந்த 8ஆம் திகதி தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஒரு ஆட்சி மாற்றத்தை காண விருப்புகின்றோம் என்ற கோரிக்கையை விடுத்திருந்தது.


மஹிந்த சிந்தனையை தோற்கடித்து, மைத்திரி யுகத்தை உண்டாக்குவதல்ல எங்கள் நோக்கம். மாற்றம் என்ற ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது. மூச்சு விடுவதற்கான காலம் வேண்டும். பேச்சு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக அந்த காலத்துக்காக வாக்களியுங்கள் என கேட்டிருந்தோம். அதனூடாக ஜனவரி 9ஆம் திகதி இந்த நாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் 100 நாட்களுக்குள் எல்லாம் நடந்து விடும் என்று எங்கள் மக்களிடம் நாங்கள் பொய்களை சொல்ல முடியாது.

அதற்கு கால இடைவெளி இருக்கின்றது. அந்த கால இடைவெளியில் நாங்கள் அதனை செய்து கொண்டுதான் செல்ல வேண்டும். வட மாகாணசபைக்கான பிரதம செயலாளர் ஏற்கெனவே இருந்தவர் இடமாற்றம் செய்யப்பட்டு புதியவர் நியமிக்கப்பட்டார். ஆனால் புதியவர் பதவியேற்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அவரை புலி என்கின்றார்கள், தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்காரர் என்கின்றார்கள். அதனால் மொனராகலையில் இருந்து இடமாற்றம் பெற்று செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.


ஆகவே பிரதமர் நல்லது செய்வார் அல்லது ஜனாதிபதி நல்லது செய்வார் என்று பார்க்காது, இவர்கள் எவ்வளவு தூரம் எமது பிரச்சினையில் கவனம் செலுத்துவார்கள் என்பதே பிரச்சனை.


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் ரத்துவத்தை வவுனியாவுக்கு இரண்டு பற்றரிகள் கொடுத்து அனுப்பியிந்ததார். அவருடைய சமாதானம் பற்றரியில் தான் தொடங்கியது. பின்னர் அவர் பற்றரியும் இல்லாமல் போய் விட்டார்.
இவ்வாறு சமாதான காலத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய சமாதான புறாக்களை பறக்கவிட்டு வருவார்கள்.

அதனால்தான் நாம் தற்போதுள்ள காலத்தை மிக துள்ளியமாக ராஜதந்திரமாக நகர்த்தவேண்டிய தேவையுள்ளது.


இதில் நாம் தவறினால் எங்கள் இனம் அடியோடு அழிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே ஏராளம் என்று தெரிவித்தார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .