2025 ஜூலை 23, புதன்கிழமை

'தமிழ் மக்களால் அன்று ஆட்சிக்கு வந்தவர் அவர்களாலேயே ஆட்சி இழந்துள்ளார்'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 25 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழ் மக்களினால் அன்று ஆட்சிக்கு வந்தவர், தமிழ் மக்களினால் இன்று ஆட்சி இழந்து தனது சொத்துகளை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று  தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமாக தாயத்தினை சனிக்கிழமை  (24) காலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இந்தத் தேசத்தில் குறிப்பாக தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் வாழ்கின்ற இடங்களில்  புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சர்வதிகாரம் தலை தூக்கியிருந்தது. தென்னிலங்கையில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்பதுடன், குடும்ப ஆட்சி மற்றும் அவர்களது ஊழல்களுக்கு எதிராகவும் கிளர்தெழுந்துள்ளார்கள்.

தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் கூட ராஜபக்ஷ ஆட்சியில் தமது நிலம், மதம், பண்பாடு, ஜனநாயகம் என்பவற்றை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டனர்.  எமது இந்த உரிமைக்காக எத்தனை, எத்தனை உயிர்களை கொடுத்தோம். எத்தனை போராட்டங்களை நடத்தினோம். இராணுவமயமாக்கலை செய்த அந்த அரசாங்கம், எமது இன அடையாளங்களையே அழித்தது. இதனால், எமது மக்கள் கண்ணீரும் கம்மலையுமாக இருந்தனர்.

தென்னிலங்கையிலிருந்து இந்த ஆட்சியை அகற்றவேண்டும் என்று குரல் வலுத்தபோது, நாங்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காகவும் இந்த மோசமான ஆட்சியை மாற்றவேண்டும் என்பதற்காகவும்  ஆதரவு கொடுக்கவேண்டியிருந்தது.

எமது நிலங்களை இராணுவத்தின் துணையுடன் பறித்து அங்கு சிங்களவர்களையும் இராணுவக் குடும்பங்களையும் குடியமர்த்தினார்கள். இதற்கு முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜக்ஷவின் ஆட்சி  காரணமாக அமைந்தது. எமது நிலத்தை நாம் பயன்படுத்தமுடியாது. எமது அடையாளத்தையும் அழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றபோது,  இந்த ஆட்சியை மாற்றக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. எமது மக்களுக்காக மரணித்தவர்களின் கல்லறைகள் கூட தேடி அழிக்கப்பட்டு அங்கு சிங்கள அடையாளங்கள் பொறிக்கப்பட்டன. இந்த நேரத்தில் எமக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது. இத்தனை ஆண்டுகளாக எந்த இலட்சியத்துக்;காக போராடினோமோ, இலட்சணக்கணக்கான மக்கள் எந்த இலட்சியத்துக்காக மரணித்தார்களோ, எதற்காக எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அந்த உணர்வில்தான்; எமது மக்கள், மாகாணசபை வந்தபோது அதில் உள்ள நன்மை, தீமைகளை பாராது மிக்கூடுதலாக வாக்களித்தார்கள்.

அந்த மக்களின் ஜனநாயக தீர்ப்பை மதிக்காது, இந்த அரசாங்கம் செயற்பட்டதால், எமது மக்களும் சிங்கள மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது,  சாதகமாக பயன்படுத்தி தாமும் பெருமளவு வாக்கினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கி,  மஹிந்த  ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் கருத்துக்களை கேட்டபோது, இது ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானம் எனக் கூறினார்கள். இது அப்பட்டமான பொய். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட ரீதியாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடம் கட்சி உறுப்பினர்களிடம் கருத்து கேட்டோம். குறிப்பாக தமிழரசுக் கட்சி அதன் கிளையை கூட்டி கருத்துக்களை கேட்டது. பல வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தோம். அவர்களிடமும் கருத்து கேட்டோம். அந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே இராஜதந்திர ரீதியாக எடுக்கப்பட்ட எமது முடிவை  காலம் வழங்காது அறிவித்தோம்.

தென் இலங்கையில் ஏற்பட்ட இந்த கிளர்ச்சி சர்வதேச ரீதியில் செல்வாக்கு செலுத்தியது. அதனால் தான் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் எல்லாம் கவனம் செலுத்தின. நாம் அவர்களிடம் கதைத்தோம். அதன் அடிப்படையிலேயே எமது முடிவையும் வெளியிட்டோம். மக்கள் எமது கருத்தை கேட்டார்கள். அதனால் பெருவாரியாக வாக்களித்தார்கள். தேர்தலை எதிர்கொள்ளாதுவிடின், அரசியல் கட்சியாக இருக்கமுடியாது. அதனாலேயே எமது முடிவை அறிவித்தோம். மைத்திரிபால சிறிசேனவை  ஆதரித்தோம். எங்களை துன்புறுத்திய, எங்களை வெளியேற்றிய ராஜபக்ஷக்களை வெளியேற்றினோம்.
நாம் எதற்காக இதுவரை போராடினோமா, அதை பெற வேண்டுமானால், எமது நிலம் எமது நிலமாக இருக்க வேண்டும். அதை அழித்தவனையே நாம் தோற்கடித்தோம். நாங்களும் தேசிய இனம். எங்களுக்கும் இறைமை இருக்கிறது. எங்களாலும் ஆட்சியாளரை தீர்மானிக்க முடியும் என்பதை இந்த ராஜபக்ஷவுக்கு காட்டியுள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .