2025 ஜூலை 23, புதன்கிழமை

கிளிநொச்சியின் சுற்றுலா மையமாகும் வன்னேரிக்குளம்

Sudharshini   / 2015 ஜனவரி 25 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் சுற்றுலா மையமாக தெரிவு செய்யப்பட்டுள்ள வன்னேரிக்குளத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை, கரைச்சி பிரதேச சபை முன்னெடுத்து வருவதாக அத்திட்டத்துக்கு பொறுப்பாகவுள்ள கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் தயாளன் ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார்.

1954ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்குளம், 375 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புக்கு காலபோக நெற்செய்கைக்குத் தேவையான நீர்ப்பாசனத்தை வழங்கி வருகின்றது.


இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக அமைந்துள்ள இப்பகுதியை,  சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்து, இந்தப் பிரதேசத்தையும் அதனை அண்டிய கிராமங்களையும் வளர்ச்சி பெறச் செய்யும் நோக்குடன் கரைச்சி பிரதேச சபையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இக்குளத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 2014ஆம் ஆண்டு, 14 இலட்சம் ரூபாய் பிரதேச சபையால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குளத்தில் படகுச் சவாரி செய்யும் நோக்குடன் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு படகு ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மிகுதி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதுக்கு அப்பிரதேசத்தில் காணப்படும் வெடிபொருட்கள் இடையூறாகக் காணப்படுகினறன.

வெடிபொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கிளிநொச்சி மாவட்டச் செயலக கண்ணிவெடிகள் அகற்றும் பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து விரைவில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உறுதியளித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பின்னர், சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் துரித கதியில் மேற்கொள்ளப்படும். அதற்காக 2015ஆம் ஆண்டு பிரதேச சபையின் வரவு–செலவுத் திட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்னேரிக்குளம் சுற்றுலா மையமாக மாற்றப்படவேண்டும் என்ற தீர்மானம் வடமாகாண சபையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வடமாகாண சபையின் கீழுள்ள சுற்றுலாத்துறை மேற்கொள்ளவுள்ளது. அவர்களுடன் இணைந்து கரைச்சி பிரதேச சபையும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .