2025 ஜூலை 23, புதன்கிழமை

எமது கோரிக்கைகளை நிறைவேற்றினால் தமிழர்களின் மனங்களை வெல்லலாம்: ஆனந்தன்

Gavitha   / 2015 ஜனவரி 25 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்


எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்லவேண்டும் என வன்னி நாடாளுமன்ற  உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.


வட மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் உழவர் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (25) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 


தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அது பல காலமாக ஏமாற்றத்தையே தந்தது. இந்த தை மாதம் எங்களுடைய வாழ்வில் மட்டுமல்ல விவசாயிகளின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்துகொண்டிருக்கின்றது.


இதற்கு காரணம் இந்த நாட்டில் இருந்த மிகப்பெரிய கொடுங்கோல் ஆட்சி அகற்றப்பட்டிருக்கின்றது. அந்த மாற்றத்தின் ஊடாக எமக்கு நிரந்தர சமாதானம் வேண்டும். அத்துடன் எமது மாகாணத்தில் உள்ள இராணுவம் கையகப்படுத்தியுள்ள நிலங்களை மீட்டெடுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் பிரச்சனை, இரகசிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவாகள் தொடர்பான நிலைப்பாடுகள் தொடர்பில், நல்ல சமிக்ஞை எமக்கு தேவையாகவுள்ளது. மாகாணசபை சுதந்திரமாக செயற்படுவதற்கான நல்ல ஆரம்ப சமிக்ஞைகள் தென்படுவதாக நாம் நம்புகின்றோம். 


நாங்களும் இந்த அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இக் கோரிக்கைகளை இந்த அரசாங்கம் நடைமுறை ரீதியாக செயற்படுத்துவதில் இருந்துதான், தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு.


மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 10 வருடம் ஆட்சியில் இருந்து யுத்தத்தை மட்டும் வென்றதே தவிர, தமிழர்களின் மனங்களை வெல்ல முடியவில்லை. அதனால்தான், அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 


ஆகவே, புதிதாக வந்தள்ள இந்த அரசாங்கம் கூட தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய அளவுக்கு எங்களுடைய கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு இந்த ஆண்டு எமக்கு இருக்க கூடிய பிரச்சனைகளை ஆராய்ந்து, நிரந்தர அரசியல் தீர்வை பெறுவது முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .