2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பிரதேச செயலாளருக்கு, மடுக்கரை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: ஆனந்தன் எம்.பி

Thipaan   / 2015 மார்ச் 30 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் மடுக்கரை மக்களை மாற்றுக்காணியில் மீள்குடியேற்றும் நானாட்டான் பிரதேச செயலாளரின் செயற்பாட்டுக்கு, மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்தார்.

மடுக்கரையில் பாடசாலை மாணவர்களுக்கு தனது நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமம், ஒவ்வொரு வருடமும் மாரி மழை காலங்களில் மல்வத்து ஓயா பெருக்கெடுப்பதால் வெள்ளநீரில் முற்றாக மூழ்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த வெள்ள அனர்த்தத்தால், இக்கிராம மக்களின் வீடுகள், தோட்டங்கள், கால்நடைகள் பெரும் அழிவுகளை சந்திப்பதுடன், இங்கு வசித்து வரும் மக்களும் இடம்பெயர்கின்றனர்.

இவர்கள், நானாட்டான் மோட்டைக்கடை உள்ளிட்ட பாடசாலைகளில் தஞ்சமடைந்து, மழை ஓய்ந்து வெள்ள நீர் வடிந்த பின்னர் வீடுகளுக்கு திரும்பும் அவலநிலை காணப்படுகின்றது.  

வருடா வருடம் சிறுவர்கள், முதியோர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் சகிதம் பாடசாலைகளிலும் பொது கட்டடங்களிலும் தஞ்சமடைகின்றனர்.

இவ்வாறு, பல்வேறு சுகாதார பிரச்சினைகளுடனும் அசௌகரியங்களுடனும் முகாம்களில் தஞ்சமடையும் உங்களின் இடர்நிலைமைகளை கவனத்திற் கொண்டே உங்களுக்கான மாற்றுக்காணிகளை வழங்கி மீளக்குடியேற்ற நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் எடுத்து வருகின்றார்.

எனவே, அவர் எடுக்கும் இத்தகைய நடவடிக்கைக்கு மடுக்கரை கிராம மக்களாகிய நீங்கள், உங்களின் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையையும் நலன்களையும் கவனத்திற் கொண்டு ஒத்துழைப்புகளை வழங்குவது நன்மை தரக்கூடியது.

எனவே இவ்விடயம் தொடர்பில் சாதகமான முடிவுகளை பரிசீலிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் நானாட்டான் பிரதேசசபை உபதவிசாளர் றீகன், உறுப்பினர் விமலநாதன் மதன், கிராம பொதுஅமைப்புகள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .