2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வில்பத்து காணிகளை ரிஷாத் கையகப்படுத்தவில்லை

Thipaan   / 2015 மார்ச் 31 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

வில்பத்து காணிகள் அரச நியமங்களுக்கு அமையவே மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஒருபோதும் கையகப்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரங்கள் அரச அதிபர் பணிமனை தொடக்கம் பிரதேச செயலாளர் வரையிலுமான அதிகாரிகளிடத்தில் உள்ளன என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரின் இணைப்புப் செயலாளர் எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் திங்கட்கிழமை,முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'அமைச்சர் ரிஷாத் பதியுதீன், டுபாயில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள ஞாயிற்றுக்கிழமை பயணமானார். மூன்று தினங்களின் பின்னரே அவர் நாடு திரும்பவுள்ளார்' என்றார்.

வில்பத்து சரணாலய காணிகளை அமைச்சர் கையகப்படுத்தியுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒருசில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்துக்காக மன்னார், முசலி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு வந்தபோது அவர்களது காணிகள், வன இலாகா அதிகாரிகளினால் வரைபடம் போடப்பட்டு அவை அரச காணிகளாக காட்டப்பட்டு இருந்தன.

இந்நிலையில், இந்த முஸ்லிம்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்க வேண்டும் என்றும் அப்போதைய அரசாங்கத்திடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதற்கிணங்க, ஜனாதிபதி செயலணி ஒன்றை ஸ்தாபித்து அப்போதைய அரசு, அதில் உள்ள அதிகாரிகளை இப்பிரதேசத்துக்கு அனுப்பி நிலைமையினை ஆராய்ந்து இந்த காணிகளை மக்களது மீள்குடியேற்றத்துக்கு வழங்க முடியும் என்ற சிபாரிசின் அடிப்படையில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வன இலாகா அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பரிந்துரைத்ததன் பின்னர் அந்த காணிகள் பிரதேச செயலாளரினால் மக்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஆனால், கடந்த காலங்களில் பொது பல சேனா என்கின்ற  அமைப்பு, இந்த மன்னார் மாவட்ட காணி தொடர்பில் பிழையான செய்திகளை வெளியிட்டு வந்தது.

இந்த காணிகள் அரச நியமங்களுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளதே தவிர அமைச்சர் பதியுதீன், இந்த காணிகளை கையகப்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரங்கள் அரச அதிபர் பணிமனை தொடக்கம் பிரதேச செயலாளர் வரையிலுமான அதிகாரிகளிடத்தில் போதுமானதாக உள்ளன. வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் பதியுதீன் நாடு திரும்பியதும், அது தொடர்பிலான தெளிவுபடுத்தலை முன்னெடுக்கவுள்ளார்' என்று அமைச்சரின் இணைப்பு செயலாளர் எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .