2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 மே 20 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து, இன்று புதன்கிழமை (20) முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதுடன்  பாடசாலை மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  

மாணவி வித்தியா போன்று வேறு எந்த வித்தியாக்களுக்கும் இவ்வாறு அநீதி இழைக்கப்படக் கூடாது எனவும் குறித்த மாணவியை கொலை செய்த காமுகர்களுக்கு உயர்ந்த பட்ச மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரியே ஹர்த்தால் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  

முல்லைத்தீவு வலயத்துக்குட்பட்ட முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம் மற்றும் தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் மிகவும் அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

குறித்த இரு பாடசாலையின் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் காலை 11 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை தடைப்பட்டன.

அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 'பெண்களுக்கெதிரன பாலியல் ரீதியிலான வன்முறைகளை தடுப்பதற்கு ஒன்றினைவோம்', 'வித்தியாவை கொலை செய்த கொலையாளிகளுக்கு மரண தண்டணை வழங்க வேண்டும்', 'நாளைய தலைவர்களை தலைநிமிர்ந்து வாழ வழி செய்யுங்கள்', 'மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்'. 'அநீதிக்கு எவரும் துணை போக வேண்டாம்', 'எங்களின் கல்விக் கனவுகளை சிதைக்காதீர்கள்', 'வித்தியாவைப் போல இன்னொரு வித்தியாவுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காதே நீதியரசே' ஆகிய சுலோகங்களை ஏந்தியவாறு மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதேவேளை, வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததுடன், நேற்றைய தினமும் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .