2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இலங்கையர்கள் வருடாந்தம் 48,000 ரூபாயை அரசுக்கு வரியாக செலுத்துகின்றனர்: பொன்சேகா

Gavitha   / 2014 டிசெம்பர் 30 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரும் வருடாந்தம் 48,000 ரூபாயை அரசுக்கு, வரியாக செலுத்தி வருகின்றோம் என ஜனநாயகக்கட்சியின் தலைவர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

வவுனியா வைரவ புளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற பொது எதிரணியின் வேட்பாளரை ஆதரிக்கும் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்நாட்டிலே ஜனநாயம் இல்லை. சுதந்திரம் இல்லை. இந்த தேர்தல் கூட நியாயமானதாக நடக்குமா என்று தெரியாது. ஜனநாயக ரீதியாக எமது நாட்டு தலைவர் செய்கின்ற குற்றங்கள் மற்றும் அவருக்கு கருத்து சொல்லக் கூடிய நிலைமைகள் இருக்க வேண்டும். நீங்கள் அரசை விமர்சித்தால் அல்லது அரசுக்கு எதிராக கருத்துச் சொன்னால் உங்களது பிள்ளைகள் மறுநாள் பாடசாலை போகமுடியாது இருக்கும்.

உங்களை ஏதாவது வழியில் பழிவாங்குவார்கள். முன்னர், வடக்கிலும் பயங்கரவாதம், தெற்கிலும் பயங்கரவாதம் இருந்தது. இன்று பயங்கரவாதம் இல்லை என்று கூறப்பட்டாலும் மக்கள் பயங்கரவாதத்தால் பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த மக்கள் தமக்குரிய வாழ்க்கையை வாழ்வதற்காக கேட்டால் அதற்கு பதில் வெடிகுண்டாக தான் இருக்கிறது. தண்ணீர் கேட்ட போதும், கட்டுநாயக்கா தொழிலாளர்கள் போராடிய போதும் இந்த நாட்டின் தலைவர் இரக்கம் இல்லாது மக்களுக்கு வெடிவைக்கச் சொன்னார்.

ஆனால், நாங்கள் உங்களுக்கு சுபீட்சமான சமாதானமான நாட்டை பெற்று தருவோம். உங்களுக்கு பயம், பீதி இல்லாமல் வாழ கூடிய நிலையை உருவாக்குவோம்.

இந்த நாட்டில் காணக்கூடிய அராஜகத்தை நீக்கி மக்கள் சுகமாக வாழக்கூடிய நிலைமையை உருவாக்குவோம். நீங்கள் ஒவ்வொருவரும் வருடாந்தம் 48,000 ரூபாயை இந்த அரசாங்கத்துக்கு வரியாக செலுத்துகின்றீர்கள். இந்த சின்னஞ்சிறு பால்குடிகள் கூட 48 ஆயிரம் ரூபாய் வரியை கட்டுகிறார்கள். 8 வருடத்துக்கு முன்னர் அரசாங்கத்துக்கு வருடத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தியிருந்தோம். நீங்கள் ஒவ்வொருவரும் வெளிநாட்டுக்கு 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடனாளியாக இருக்கிறீர்கள்.

பாடசாலை செல்லும் மாணவர்கள் கூட இந்த பணத்தை கட்ட வேண்டியுள்ளது. இவ்வாறு மக்கள் செலுத்தும் வரியினால் இந்த நாட்டின் தலைவர் சுவீட்சமாகவும் செல்வாக்காகவும் ஆடம்பரமாகவும் வாழ்கின்றாரே தவிர, மக்களுக்கு இந்த பணம் கிடைக்கவில்லை.

200 இலட்சம் மக்கள் வாழுகின்ற இந்த இலங்கையில், ஒருவருக்கு ஒரு  வருடத்துக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் தான் சுகாதாரத்துக்காக ஒதுக்கப்படுகிறது. படிப்புக்காகவும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது.

உங்களுடைய வாழ்வாதாரத்துக்கும் குறைந்தளவு நிதியே ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்த நாட்டினுடைய தலைவரின் மனைவி குதிரைப் பயணம் செய்ய செலவழிப்பதைக் கூட, நாட்டு மக்களுக்காக ஒதுக்குவதில்லை.

நீங்கள் கட்டும் வரிப்பணத்தில் இலட்சக் கணக்கில் கொடுத்து, நுவரெலியாவுக்கு காலையில் ஹெலியில் சென்று குதிரை சவாரி செய்து விட்டு மாலை ஹெலியில் கொழும்புக்கு திரும்புகிறார்கள். நாட்டு மக்களுக்கு பல இருக்கின்ற போதும் மக்களின் பிரச்சனைகளை கணக்கெடுக்காமல் இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றப் போகிறார் என்று ஏமாற்றுகிறார்.

உலகத்தில் உள்ள 172 நாடுகளிலில் தற்கொலை செய்யும் நாடுகளில் இலங்கை 02ஆவது இடத்தில் உள்ளது. உலகத்தில் சந்தோஷமாக மக்கள் வாழும் நாடுகள் 150இல் இலங்கை 138 ஆக தான் இருக்கிறது.

எங்கள் நாட்டில் தலைவர் இந்த நாட்டின் கலாசாரத்தை ஒழுங்காக சீரமைப்பு செய்யவில்லை. இந்த நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. முன்பு போதைப் பொருளை சிறிது ஒழித்து தான் கொண்டு வந்தார்கள்.

ஆனால் இப்பொழுது சீமெந்து மூடை போல் கொள்கலன்களில் மூடை மூடையாக கொண்டு வரப்படுகிறார்கள். முன்னர் மதுசாரத்தை சிறிதளவில் தான் கொண்டு வந்தார்கள். ஆனால் தற்போது பவுசர் கணக்கில் வருகிறது. இந்த நாட்டில் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படுவதில்லை.

இந்த நாட்டில் அபிவிருத்தி என்று சொல்கிறார்கள். ஆனால் மக்களுக்கு மூன்று நேரம் சாப்பிட வழியில்லாமல் இருக்கிறார்கள். சமைப்பதற்கு அடிப்படியில் பொருட்கள் இல்லை. இந்த நாட்டில் உள்ள 200 இலட்சம் மக்களிடம் இருந்து காசைப் பறித்துள்ளனர். ஆனால் இந்த நாட்டின் தலைவர் ஒரே அடியாக 200 இலட்சம் மக்களிடமும் எடுத்துள்ளார்.

தற்போது வடக்குக்கு அதிவேக பாதை ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த வீதி அமைக்கின்ற போது குருநாகல், அனுராதபுரம், வவுனியா என்ற நகரங்கள் மூடப்பட வேண்டியுள்ளது. இந்த நகரங்களின் வியாபாரம் செயல் இழக்கும். எங்களுக்கு ஜனவரி 8 ஆம் திகதி வெற்றி கிடைத்தால் இந்த நாட்டை 3 வருடத்துக்குள் நல்ல நிலைக்கு கொண்டு வருவோம்.

இந்த மக்கள் 3 நேரம் சாப்பிடக் கூடிய வசதி, இந்த மக்கள் வாழக் கூடிய வழிவகைகளை செய்வோம். இன,மத பேதங்கள் ஏற்பட விடமாட்டோம். இந்த நாட்டில் முன்னர் இருந்த அசாதாரண நிலையை நாம் இல்லாமல் செய்துள்ளோம். இனி நாம் அபிவிருத்தி செய்வோம். இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு அநீதி செய்ததை யாரும் மறக்கமாட்டார்கள். எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அபிவிருத்தியை நாம் ஏற்படுத்துவோம்.

வடக்கிலோ, தெற்கிலோ, இன, மத வேறுபாடு பார்க்கமாட்டோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நாட்டை உருவாக்குவோம். ஜனவரி 8ஆம் திகதி நாம் வெற்றி பெற்று ஆசியாவின் ஆச்சரியம் என்று கூறுபவரிடம் இருந்து இந்த நாட்டை பாதுகாப்போம். மின்சாரக் கதிரைக்கு தான் போகவேண்டி வரும் ஆதலால் தனக்கு வாக்களிக்க சொல்லி கேட்கிறார்.

ஆனால் மக்களின் அன்பை அவரால் பெறமுடியாது. எனவே தமிழ் மக்களுக்கு தெரியும் நான் யுத்தம் செய்த காலத்தில் மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக செயற்பட்டோம் என்பது. எனவே, அரசின் பொய்களை நம்பாமல் மக்கள் எம்பக்கம் தான் உள்ளார்கள் என தெரிவித்தார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .