2025 ஜூலை 17, வியாழக்கிழமை

6 மணி நேரத்திற்கு பின் ஊடகவியலாளர்கள் விடுவிப்பு: சாரதி கைது

Kanagaraj   / 2014 ஜூலை 26 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


கொழும்பில், இடம்பெறும் இருநாள் ஊடக பயிற்சிக்காக வடக்கிலிருந்து வந்த ஊடகவியலாளர்கள், ஓமந்தை பொலிஸாரால் 6 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏ-9 வீதியை மறித்து,  ஊடகவியலார்கள்  நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்தே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் பயணித்த வாகனத்தில் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர், இரு வாகனங்களில் நேற்றிரவு கொழும்பை நோக்கி பயணித்துள்ளனர்.

முதலாவது வாகனம் வவுனியாவை கடந்து சென்ற நிலையில், இரண்டாவதாக வந்த வாகனம் மாங்குளம் பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் வழி மறிக்கப்பட்டு இராணுவ பொலிஸாரினாலும் சிவில் உடையில் இருந்தவர்களினாலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பயணத்தை தொடர்வதற்கு அந்த வாகனத்திற்கு  அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமந்தை சோதனைச்சாவடியில் இரவு 9.30 மணியளவில் வாகன பதிவுகளை மேற்கொள்வதற்காக சாரதி, வாகனத்தை பதியும் இடத்திற்கு சென்றுள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில்,  அங்கு வந்த இராணுவத்தினர்  அறுவர், சாரதியின் ஆசனத்திற்கு கீழ் சிறிய சிகரெட் பெட்டியில் கஞ்சா இருப்பதாக தெரிவித்து ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் மூவர், சாரதியையும் அதில் பயணித்த எஸ்.நிதர்சன், வி. கஜீபன், எஸ். சொரூபன், கே. கம்சன், எஸ். பாஸ்கரன், மயூரபிரியன் மற்றும் கெனடி நியூமன் ஆகிய ஊடகவியலாளர்களையும் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி இழுத்து சென்று ஓமந்தை சோதனைச்சாவடியில் உள்ள பொலிஸ் காவலரனில் தடுத்து வைத்துள்ளனர்.
அதன் பின்னர் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஊடகவியலாளர்கள், இராணுவத்தினரே கஞ்சாவை எமது வாகனத்தில் வைத்ததாகவும் பொலிஸார் மிக கீழ்த்தரமாக தம்மை நடத்தியதாகவும் இது தொடர்பில் தமது முறைப்பாட்டை பதிவு செய்யுமாறும் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டனர்.

இதனையடுத்து ஊடகவியலாளர்கள் அனைவரது பெயர்களும் பணியாற்றும் ஊடக நிறுவனங்களின் பெயர்களும் பதியப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை விடுவிப்பதாகவும் சாரதியை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தபோவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் ஊடகவியலாளர்களால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இச்சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்த முற்பட்ட வேளையில் அவர்கள் தொலைபேசியை முடுக்கியும் அழைப்பை ஏற்படுத்தாமலும் இருந்த நிலையில் வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி. சிவமோகன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் எனினும், எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இதேவேளை தமது முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபோதிலும் இன்று அதிகாலை 2 மணியாகியும் முறைப்பாடு பதிவு செய்யப்படாமையினால் ஏ-9 வீதியை மறித்து ஊடகவியலாளர்கள் கோசங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகைதந்த ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முறைப்பாட்டை பதிவு செய்வதாகவும் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறும் கோரியிருந்தார்.

அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட ஊடகவியலாளர்கள் தமது தரப்பு முறைப்பாட்டை பதிவு செய்திருந்த நிலையில் மீண்டும் பயிற்சிக்காக புறப்பட்டுசென்றனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சாரதியை வவுனியா நீதவான் முன்னிலையில்  ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X