2025 மே 09, வெள்ளிக்கிழமை

’அணைக்கட்டை உயர்த்தினால் பிரச்சினை வராது’

Niroshini   / 2021 ஜூலை 01 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார் 

கிளிநொச்சி  - கரியாலைநாகபடுவான் குளத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் குமுழமுனை வரை காணப்படுகின்ற வயல் நிலங்களில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியுமெனத் தெரிவித்த பூநகரி பிரதேச சபை உறுப்பினர் சி.சிறிரஞ்சன், இந்தக் குளத்தின் அணைக்கட்டை உயர்த்துவதினால் எந்த பிரச்சினைகளும் ஏற்படப்போவதில்லை என்றும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  கரியாலைநாகபடுவான் குளம் கடந்த பத்தாண்டுகளில் சொல்லும்படியான புனரமைப்புப் பணிகள் இடம் பெறவில்லை என்றார்.

இக்குளத்தின் கீழ்,  1,520 ஏக்கர் வரையான நீர்ப்பாசன வயல் நிலம் காணப்படுகின்றன எனத் தெரிவித்த அவர்,   மானாவாரி நிலம் 400 ஏக்கருக்கு மேல் உள்ளதெனவும்  பல்லவராயன்கட்டு வயல் நிலங்களுக்கும் கரியாலைநாகபடுவான் குளத்தில் இருந்து நீர்ப்பாசனம் மேற்கொள்ள முடியுமெனவும் கூறினார்.

 சிறுபோகத்தில் 600 ஏக்கர் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியுமென்றும் இக்குளத்தின் நீர் வருகை தரும் ஆறாக முடக்கன் ஆறு காணப்படுகின்றதோன்றும், அவர் கூறினார்.
 
"2010ஆம் ஆண்டில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர், இந்தக் குளத்தின் சிறு திருத்த வேலைகளுக்காக ஐந்து மில்லியன் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. குளத்தின் அணைக்கட்டு முழுமையாக 07 கிலோ மீற்றர் தூரம் பண்டிவெட்டிக் குளம் அடங்கலாக புனரமைக்கப்பட வேண்டும்.  இக்குளத்தின் நீர் வருகை ஆறான முடக்கன் ஆறு குறைந்தது 01 கிலோ மீற்றர் தூரத்திற்கு துப்பரவு செய்யப்பட வேண்டும். 

"பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் முக்கிய குளமாக இக்குளம் காணப்பட்ட போதிலும், நீர் வருகின்ற முடக்கன் ஆறு துப்பரவு செய்யப்படாததன் காரணமாக, குளத்தின் நீர் மட்டம் உயர்வதில் தாமதங்கள் உள்ளன. எனவே, முடக்கன் ஆற்றை துப்புரவு செய்து கரியாலைநாகபடுவான் குளத்தின் நீர் மட்டத்தை அதிகரிக்க வேண்டும்" என்றும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், கரியாலைநாகபடுவான் குளத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் குமுழமுனை வரை காணப்படுகின்ற வயல் நிலங்களில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியுமெனத் தெரிவித்த அவர்,  "குளத்தின் அணைக்கட்டை உயர்த்துவதினால் எந்த பிரச்சனைகளும் ஏற்படப் போவதில்லை. குளத்தின் பின்பகுதி காடாகவே காணப்படுகின்றது. எனவே கரியாலைநாகபடுவான் குளத்தை அபிவிருத்தி செய்வதில் தடைகள் இருக்கப் போவதில்லை" என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X