2025 மே 09, வெள்ளிக்கிழமை

’அபிவிருத்தியைச் சீர்குலைக்க எதிர்ப்பிரசாரம் முன்னெடுப்பு’

Niroshini   / 2021 ஜூலை 07 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான  டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில், கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்காக, திட்டமிட்ட வகையில் எதிர்ப்பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சரின் இணைப்பாளர் வை.தவநாதன், மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

பூநகரி பிரதேச செயலகத்திலும், முழங்காவில் விநாயகர் உற்பத்திக் கூட்டுறவுச்சங்க மண்டபத்திலும். அண்மையில் நடைபெற்ற சௌபாக்கியா சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் உற்பத்திக் கிராம நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அங்கு தொடர்ந்துரைத்த அமைச்சரின் இணைப்பாளர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம், கைத்தொழில், கடற்றொழில், உட்கட்டுமான அபிவிருத்தி என்று பல்வேறு துறைகளிலும் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் எனினும், இந்தப் பணிகள் தொடர்பான தவறான பிரசாரங்கள் சில தரப்புக்களால் ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் கூறினர்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கும் ஆடைத்தொழிற்சாலையை, கொரோனா தொற்றைக் காரணங்காட்டி, மூடச்செய்வதற்கு முயற்சித்த சில தரப்புகள், தற்போது, தடுப்பூசி வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாக குழப்பமேற்படுத்தும் தகவல்களை பரப்பிவருகின்றனர் என்றும், அவர்கள் சாடினர்.

மேலும், சந்தைப்படுத்த முடியாமலிருந்த விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையிலும், எதுவுமே நடைபெறவில்லை என்றவிதமான தகவல்கள் பரப்பப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதெனவும், அவர்கள் கூறினர்.

'இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பொருளாதார ரீதியாக பலம் பெறுவதை விரும்பாத சில வல்லாதிக்க நாடுகள், இங்குள்ள சிலரை கொண்டு இதுபோன்ற எதிர்ப்பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து, தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து வருகின்றன.

'எனவே, திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திக்கு எதிரான போலிப் பிரசாரங்களுக்கு மக்கள் எடுபடாமல், அவதானமாகச் செயற்படுவதன் மூலம், கிளிநொச்சி மாவட்டத்தை விரைவாக அபிவிருத்தியில் தூக்கி நிறுத்த முடியும்' என்றும், இணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X