2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இபாட் திட்டத்தில் முறைகேடுகள்

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ், இபாட் திட்டத்தினால் கிளிநொச்சி, ஊரியான் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமான வேலைகள், உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை' என்றும் 'இத்திட்டத்தின் கீழ், விவசாயச்செய்கைக்கு அமைக்கப்பட்டுவரும் கிணறுகள், உரிய தெரிவுகளின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை' எனவும்  பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் ஆசியஅபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை, குளத்தின் கீழ் அமைந்திருக்கும் 21,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கின்ற பிரதான வாய்க்கால், வயல் வாய்க்கால், கழிவு வாய்க்கால் மற்றும் விவசாய வீதிகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள், இபாட் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 2,890 மில்லியன் ரூபாய் இலகு கடனிலும், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 310 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடனும் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது.

இதில் 2013ஆம் ஆண்டில் 10 வேலைத்திட்டங்களும் 2014ஆம் ஆண்டு 16, 2015ஆம் ஆண்டு 40, 2016 ஆம் ஆண்டு 65 வேலைத்திட்டங்கள் என 2,800 மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விவசாயச்செய்கைகளுக்காக இரணைமடுகுளத்தின் கீழுள்ள பயிர்ச்செய்கை காணிகளில் 20 குழாய்க்கிணறுகள் மற்றும் 60 திறந்த கிணறுகள் என்பன அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஊரியான் கமக்கார அமைப்பின் கீழ், தெரிவுசெய்யப்பட்ட குழாய்க்கிணறுகள் உரியமுறையில் விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தாமலும் உரிய இடங்கள் தெரிவு செய்யப்படாமலும் குறித்த அமைப்பின் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோரின் தன்னிச்சையான தெரிவுகளின் அடிப்படையில் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு மாறாகவும் பொருந்தாத காணிகளிலும் அவர்களது காணிகளிலேயே இரகசியமான முறைகளில் குறித்த கிணறுகளை அமைத்துள்ளனர்' என விவசாயிகள், பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'அவ்வாறான பாரிய தவறு ஒன்றை குறித்த அமைப்பு செய்துள்ளதுடன் ஏற்கெனவே தங்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் கிணறுகள் அமைக்கப்படாமல் வேறு இடங்களில் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சொல்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .