2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் பிரச்சினை தொடர்பில் சந்திப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் தலைவர் ராமல் சிறிவர்த்தன நேற்று வெள்ளிக்கிழமை (16) மாலை, மன்னார் ஆயர் இல்லத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஓய்வு பெற்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகையை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னார் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையினை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் ஆயர் இல்லத்துக்கு வருகை தந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும், இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

குறித்த சந்திப்பின் போது, ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளிதரன், இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை முகாமையாளர் முஹமட் சாகீர், வடமாகாண பிராந்திய முகாமையாளர் உபாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, மன்னார் மாவட்டத்தில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் தலைவரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

குறிப்பாக பண்டிகைக்காலங்களுக்கு மறு தினம் போக்குவரத்துச் சேவையில் ஏற்படுகின்ற தடங்கள் குறித்தும், இதனால் பயணிகள், மாணவர்கள், அரச திணைக்கள அதிகாரிகள் எதிர் நோக்கும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பிலும் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

மேலும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கு பல்வேறு வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் அரசியல் செல்வாக்குடன் குறித்த வெற்றிடங்கள் நிறப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு வெற்றிடங்கள் நிறப்பப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் கடந்த காலங்களை விட தற்போது இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை சிறப்பாக செயற்படுவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மன்னார் மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக எதிர் நோக்குகின்ற போக்குவரத்துப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .